Published:Updated:

க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை.. ஸ்டாலின் பேட்டி! #NowAtVikatan

க.அன்பழகன் - ஸ்டாலின்
க.அன்பழகன் - ஸ்டாலின்

6-3-2020 | இன்றய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

06 Mar 2020 8 PM

க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை!

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காத வகையில் அவரது உடல்நிலை இருக்கிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று அப்போலோவில் அன்பழகன் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின் ஸ்டாலின் தகவல்.

06 Mar 2020 9 PM

நீலகிரி கோடைவிழா தேதிகள் அறிவிப்பு!

நடப்பு ஆண்டிற்கான கோடை விழா தேதிகள் முடிவு செய்யப்படுவதற்கான அரசுத்துறை ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் சுப்பையன் " 2020ஆம் ஆண்டின் நீலகிரி கோடை விழா மே மாதம் நடத்தப்படவுள்ளது.

கோத்தகிரி காய்கறி கண்காட்சி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளிலும், நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி 8 முதல் 10ம் தேதிகளிலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி15 முதல் 19 வரையிலும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 22 முதல் 24 வரையிலும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி 29 முதல் 3ம் வரை நடைபெற உள்ளது.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது.புகழ் வாய்ந்த ஊட்டி ரோஜா பூங்கா நிறுவப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகளை வருக வருக என வரவேற்கிறோம்" என்றார்.

06 Mar 2020 5 PM

விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது புட்லூரை சேர்ந்த வேலவன், சந்துரு ஆகிய தொழிலாளர்களை விஷ வாயு தாக்கியதால் அவர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளனர்.

06 Mar 2020 11 AM

11-ம் தேதிவரை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

டெல்லி கலவரம் தொடர்பாகத் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும், நேற்று 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் வரும் 11-ம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

06 Mar 2020 9 AM

இனி அ.தி.மு.க அலுவலகம் அருகே அ.ம.மு.க அலுவலகம்!

டி.டி.வி தினகரனின் அலுவலகம் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மகனுக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இது சென்னை கே.கே நகரில் உள்ளது. இசக்கி சுப்பையா அ.தி.மு.க-வில் இணைந்துவிட்ட காரணத்தால், அ.ம.மு.க அலுவலகம் மாற்றப்படும் என்ற பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில், வரும் 12 -ம் தேதி முதல் அ.ம.மு.க அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க அலுவலகத்துக்கு அருகே செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

06 Mar 2020 9 AM

கோர விபத்து!

accident
accident

தமிழக பக்தர்கள் கர்நாடகாவில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பியபோது தும்கூர் அருகே கார் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு