Published:Updated:

முதல்வர், துணை முதல்வர் தனித்தனியே ஆலோசனை! - பன்னீர்செல்வத்தைச் சந்தித்த அமைச்சர்கள் #NowAtVikatan

முதல்வர், துணை முதல்வர்
முதல்வர், துணை முதல்வர்

06-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

06 Oct 2020 11 AM

பன்னீர்செல்வத்தை சந்தித்த அமைச்சர்கள்!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகும் நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சென்னையில் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்கள். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் காலை முதலே துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

நாளை கட்சியின் 11 பேர் வழிகாட்டுதல்குழு குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மறுபுறம் முதல்வர் பழனிசாமியும் தனது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

06 Oct 2020 11 AM

திரையரங்குகளைத் திறக்க வழிகாட்டுதல்!

திரையரங்கு
திரையரங்கு

இந்தியாவில் அக்டோபர் மாதத்துக்கான ஊரடங்கு தளர்வில் மத்திய அரசு அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது திரையரங்குகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் மத்திய அரசு, ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. மேலும் 50% இருக்கையுடன்தான் தியைரங்குகள் செயல்பட வேண்டும்; அடுத்தடுத்த இருக்கையில் அமர அனுமதி கிடையாது உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன!

06 Oct 2020 9 AM

கனிமொழி மீது ஐந்துபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

பேரணி
பேரணி

ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கி தி.மு.க எம்.பி கனிமொழி தலைமையில் தி.மு.க மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். தடையை மீறிப் பேரணி சென்ற கனிமொழி உள்ளிட்ட மகளிரணியினர் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் சட்ட விரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், தொற்றுநோய்ப் பரவல் சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் கனிமொழி உட்பட 191 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது!

06 Oct 2020 8 AM

வெள்ளை மாளிகை திரும்பினார் ட்ரம்ப்!

ட்ரம்ப்
ட்ரம்ப்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகை திரும்பினார். கடந்த நான்கு நாள்களாக வாஷிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். சிகிச்சையில் இருக்கும்போது அவர் காரில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்கத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிபர் ட்ரம்ப், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்: அப்போ `மாஸ்க் போட மாட்டேன்'; இப்போ `காரில் சுற்றுவேன்' - கொரோனா சிகிச்சையிலும் அடாவடி!
அடுத்த கட்டுரைக்கு