Published:Updated:

ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கு கொரோனா தொற்று! - 34ஆக அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கை #NowAtVikatan

கொரோனா அலர்ட் - இந்தியா
கொரோனா அலர்ட் - இந்தியா

7-3-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

07 Mar 2020 8 AM

அன்பழகன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அதிகாலை காலமான நிலையில், அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடல், கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள், தி.க தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

`என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?!'- தி.மு.க தலைவர் ஸ்டாலின் உருக்கம் #Anbazhagan

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன், ``தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

07 Mar 2020 10 AM

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் உடலுக்கு வைரமுத்து உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி!

07 Mar 2020 11 AM

கொரோனா வதந்திகளை நம்பாதீர்கள்! - பிரதமர் மோடி

மோடி
மோடி

இந்தியப் பிரதமர் மோடி இன்று ஜான் ஆஷாதி திட்டத்தின் (தரமான மருந்துகளை மலிவு விலையில் வழங்கும் திட்டம்) மூலம் பயன்பெற்றவர்களிடம் உரையாடினார். அப்போது பேசிய அவர், ``இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாகப் பரவும் வீடியோ, செய்திகள் போன்ற வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். வைரஸ் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

07 Mar 2020 1 PM

விரைவில் மயிலாடுதுறை தனிமாவட்டம்?

நாகையில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாகவும், அந்த வகையில் நாகையிலிருந்து மயிலாடுதுறையைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு இது தொடர்பாக விரைந்து முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் சேர்த்து தற்போது 37 மாவட்டங்கள் உள்ளது.

07 Mar 2020 2 PM

ஓய்வை அறிவித்தார் வாசிம் ஜாபர்!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் ரஞ்சி டிராபி நாயகனுமான வாசிம் ஜாபர் சர்வதேச மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். முதல்தர போட்டிகளில் 1996-97 -ம் சீசனில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணிக்காக அவர் 2008 -ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். ஜாபர் முதல்தர கிரிக்கெட்டில் 260 போட்டிகளில் ஆடியுள்ளார். 19,410 ரன்களும் குவித்துள்ளார். இதில் 57 சதங்களும், 91 அரை சதங்களும் அடங்கும். முதல்தரப் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 314.

ரஞ்சி டிராபி லெஜண்ட் வாசிம் ஜாபர் இன்று தனது ஓய்வை அறிவித்தார். தனது ஓய்வு அறிவிப்பில், ``பள்ளி காலம் முதல் தற்போது வரையிலான அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. என்மீது நம்பிக்கை வைத்த தேர்வுக் குழுவினருக்கும் நன்றி. என் தந்தை அவரின் குழந்தைகளில் ஒருவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கனவு கண்டார். அதை நான் நிறைவேற்றியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி. கிரிக்கெட் வாழ்வில் எனது முதல் இன்னிங்ஸ்தான் முடிவுக்கு வந்துள்ளது. பயிற்சியாளராக, வர்ணனையாளராக எனது கிரிக்கெட் பயணம் தொடரும். என்னால் முடிந்த வரை கிரிக்கெட்டுடன் இணைந்து இருப்பேன். கிரிக்கெட் எனக்கு எல்லாமே கொடுத்தது" என்றார்.

07 Mar 2020 3 PM

நடிகர் அஜித் எச்சரிக்கை!

ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கு கொரோனா தொற்று! - 34ஆக அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கை #NowAtVikatan

அஜித்குமார் பெயரில் சமீபத்தில் வெளியான கடிதம் போலியானது என்று அவரது சட்ட ஆலோசகர் தரப்பு அறிவித்துள்ளது. அதில், "எனக்கு அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்குகள் எதுவும் இல்லை. எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை. சமூக ஊடகங்களில் எந்தவொரு கருத்தையும், ரசிகர் பக்கத்தையும், குழுவையும் ஆதரிக்கவில்லை. மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி எந்தக் கடிதத்தையும் வெளியிடவில்லை. தவறான கடிதத்தை வெளியிட்டு கையெழுத்து மோசடி செய்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அஜித் கூறியுள்ளார்.

07 Mar 2020 6 PM

அன்பழகன் உடல் தகனம்!

ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கு கொரோனா தொற்று! - 34ஆக அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கை #NowAtVikatan

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு சென்னை வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதியாக அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது அருகில் இருந்து துரைமுருகன் மார்பில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தார். முன்னதாக இறுதி ஊர்வலத்தில் கனிமொழி, ஸ்டாலின், கி. வீரமணி, வைரமுத்து ஆகியோர் நடந்தே வந்தனர்.

07 Mar 2020 6 PM

ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலர் சஞ்சீவ குமார், ``ஓமனிலிருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவர், ஈரானில் இருந்து லடாக் வந்த இரண்டு பேர் என மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க சோதனை மையங்கள் மற்றும் சிகிச்சைப் பிரிவுகளை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார்'' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு