Published:Updated:

கொரோனாவின் புதிய வீரியமிக்க வகை வைரஸ் தமிழகத்தில் பரவல்? #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

7.6.2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

07 Jun 2020 5 PM

கொரோனாவின் புதிய வீரியமிக்க வகை வைரஸ் தமிழகத்தில் பரவல்?

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 30,152 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்று ஒரேநாளில் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸூக்கு நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 0.83 % ஆக உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395 ஆக இருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தநிலையில், தமிழகத்தில் வீரியமிக்க க்ளேட் ஏ13ஐ வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட ஏ1, ஏ2, ஏ3, பி1 மற்றும் பி2 வகை வைரஸ்களைவிட க்ளேட் ஏ13ஐ வகை வைரஸ்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இந்த வைரஸ் தமிழகத்துக்குப் பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

07 Jun 2020 10 AM

இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657-இலிருந்து 2,46,628 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 9,971 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

`செப்டம்பர் இறுதியில் கொரோனா உச்சநிலை... அதன்பிறகு என்னவாகும்?' - கணிக்கும் மருத்துவர்
கொரோனா
கொரோனா

அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,073-லிருந்து 1,19,293 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,642-இலிருந்து 6,929 ஆக அதிகரித்திருக்கிறது. தொற்று பாதிப்பால் 1,20,406 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 69,73,427ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 34,11,118 ஆக அதிகரித்தது. உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,02,049 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 19,88,544 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,12,096ஆக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு