Published:Updated:

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு! #NowAtVikatan

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம்
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம்

07-12-2020 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Dec 2020 6 PM

எட்டுவழிச் சாலைத் திட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கான அறிவிப்பாணையைக் கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 8-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாததைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் இந்தத் திட்டத்துக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்ட இயக்குநர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

07 Dec 2020 2 PM

`நான் சங்கியா... பி டீமா..?’ - கொதித்த கமல்

தன்னை சங்கி என்றும் பி டீம் என்றும் விமர்சிப்பவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ``அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்பவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்துகொள்வதில் ஆச்சர்யமில்லை.

திகாரையும் பரப்பன அக்ரஹாராவையும் நிரப்பினவர்கள் அல்லவா... தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்துகாட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

07 Dec 2020 12 PM

சாதிவாரிப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க ஆணையம் அமைப்பு!

தமிழகத்தில் சாதிவாரிப் புள்ளிவிவரங்களைத் திரட்டி அரசுக்கு அளிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். ஓய்வுபெற்ற குலசேகரன் ஆணையம் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கும் முதல்வர், விரைவில் அதற்கான பணி தொடங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

`சாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தனி ஆணையம்!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan
07 Dec 2020 11 AM

வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படித் தொடங்குவீர்கள்?

`Central list of projects' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளும் இந்தத் திட்டத்தின் கீழ்தான் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளுக்குப் பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி அடிக்கல் நாட்டவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய நாடாளுமன்றம் - வரைபடம்
புதிய நாடாளுமன்றம் - வரைபடம்

இந்தநிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களைத் தொடங்குவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கில், புதிய கட்டுமானப் பணிகள் தொடங்குவதோ, பழைய கட்டடங்களை இடிப்பதோ என எந்தவொரு பணியும் நடைபெறக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இந்தச்சூழலில், புதிய கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

`பணத்தைச் செலுத்த 10 ஆண்டு கால அவகாசம்!’ - AGR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
07 Dec 2020 11 AM

எட்டு மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் இறுதியில் மூடப்பட்ட கல்லூரிகள் சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

07 Dec 2020 11 AM

நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. அதேபோல், கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாததால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு