`தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி!’- தமிழக அரசு #NowAtVikatan

08-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி: தமிழக அரசு
அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
திரையரங்குகளில் 100 % அனுமதிக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், திரையரங்குகளில் 100 % அனுமதி விதிமீறல் என ஏற்கெனவே மத்திய உள்துறைச் செயலர் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

மத்திய அரசின் அறிவுறுத்தலைக் கருத்தில்கொண்டும், உயர் நீதிமன்ற வழக்கைக் கருத்தில்கொண்டும் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்ற முடிவுக்கு, தமிழக அரசு வந்திருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளைத் திரையிடத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், இன்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இனி 9-ம்கட்ட பேச்சுவார்த்தை வரும் 15-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
`தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது'
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையையும், தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது. கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது” என்றார்.
தயாராகும் தமிழகம்!
ஜனவரி 2-ம் தேதி தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஒத்திகை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை சேமிக்க கட்டமைப்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் கொரோனா தடுப்பூசி ஒத்திகையையும், தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று பார்வையிட்டுவருகிறார். பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு செய்யும் அமைச்சர் இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.