Published:Updated:

`ஆன்லைன் விற்பனை மட்டுமே அனுமதி; நாளை முதல் டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது!’ - உயர் நீதிமன்றம் அதிரடி #NowAtVikatan

டாஸ்மாக்
டாஸ்மாக்

8.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 May 2020 6 PM

நாளை முதல் டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது!

டாஸ்மாக்
டாஸ்மாக்

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைப் பின்பற்றவில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை மூட உத்தரவிட்டது. மேலும், மே 17-ம் தேதி வரை ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டது.

08 May 2020 6 PM

தமிழகத்தில் 6,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

08 May 2020 1 PM

கொரோனா தடுப்புப் பணிக்குச் செவிலியர்கள் நியமனம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காகப் புதிதாக 2,570 செவிலியர்களைப் பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர். இந்தச் செவிலியர்களுக்குப் பணி ஆணை கிடைத்த அடுத்த 3 நாள்களுக்குள் பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அறிக்கை
அறிக்கை

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்களுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்கா மருத்துவமனைக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தபடவுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மேலும் வலுவடையும் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

08 May 2020 11 AM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா நிலவரம்!

`ஆன்லைன் விற்பனை மட்டுமே அனுமதி; நாளை முதல் டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது!’ - உயர் நீதிமன்றம் அதிரடி #NowAtVikatan

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னை மொத்தம் 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ராயபுரம் மண்டலத்தில் அதிகப்படியான பாதிப்புகள் இருந்தன. பின்னர் திரு.வி.க நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்த நிலையில், தற்போது கோடம்பாக்கம் மண்டலம் இந்த இரு மண்டலங்களைவிட அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, கோடம்பாக்கம் மண்டலத்தில் 461 பேரும், திரு.வி.க மண்டலத்தில் 448 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 422 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

08 May 2020 10 AM

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 170 கோடி வசூல்!

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை ஆனதாகவும் சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும் விற்பனையாகியுள்ளன.

08 May 2020 7 AM

கோயம்பேடு வியாபாரி கொரோனாவுக்குப் பலி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஒருவாரமாகக் கோயம்பேடு சந்தையிலிருந்து கொரோனா மிகப்பெரிய அளவில் பரவியுள்ளது. தமிழகத்தின் புதிய ஹாட்ஸ்பாட்டாகக் கோயம்பேடு மாறியுள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோயம்பேடு வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒரு முதியவரும் கொரோனா காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே சிறுநீரக நோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Pixabay

மேலும், சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி ஒருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் சென்னையில் இன்று மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 -ஆக அதிகரித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு