`தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்’ - மருத்துவமனை நிர்வாகம் #NowAtVikatan

8-6-2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இன்று காலையில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜனின் அளவு அதிகரித்துள்ளதாகவும் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது..
தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தேர்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலியுங்கள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என்பது குறித்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
`தேர்வை நடத்த இதுவே சரியான தருணம்!'
தமிழகத்தில் 10 -ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. `பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2-வது வாரத்தில் நடத்துவது குறித்து மதியம் 2.30 மணிக்குள் முடிவெடுத்து அரசு தரப்பில் பதில் தெரிவிக்க வேண்டும். ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது' என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மதியம் மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான நேரம் என வாதாடியது.

மேலும் தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் தேர்வை நடத்தத இதுவே சரியான நேரம் என வாதாடினர். தொடர்ந்து 10 -ம் வகுப்பு தேர்வு என்பது முக்கியமான தேர்வு என்றும், 11 மாநிலங்கள் ஏற்கெனவே இந்தத் தேர்வை நடத்தி முடித்துவிட்டன எனவும் தேர்வு மையங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு வாதாடி வருகிறது.
ஜூன் 15ல் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது! - சென்னை உயர் நீதிமன்றம்
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்துவது குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொரோனா தாக்கம் குறையும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு ஒத்திவைத்திருக்கிறது. இந்தச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத மாணவர்களை அரசு ஏன் நிர்பந்திக்கிறது. இதன்மூலம் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் என அனைவரையும் இக்கட்டுக்கு ஆளாக்க வேண்டுமா? லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்?’ என தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்துவது குறித்து மதியம் 2.30 மணிக்குள் முடிவெடுத்து அரசு தரப்பில் பதில் தெரிவிக்க வேண்டும். ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
பத்திரப் பதிவு டோக்கனையே இ-பாஸாகப் பயன்படுத்த அனுமதி!
பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே இ - பாஸாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியிருக்கிறார்.
பத்திரப்பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை, பதிவு செய்யப்போகும் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரம் பதிவு செய்ததற்கான ஆவணத்தை ஆதாரமாக காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. டோக்கன் மற்றும் ஆவணங்களை காண்பிப்போரை மாவட்டங்கள் இடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,628 இலிருந்து 2,56,611 உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 9,983 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 206 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து 1,24,095 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,929-இலிருந்து 7,135 ஆக அதிகரித்திருக்கிறது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 70,91,634 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 34,61,061 ஆக அதிகரித்தது. உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,192 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 20,07,449 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,12,469ஆக இருக்கிறது.