Published:Updated:

தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்குத் தடை! - அரசாணை வெளியிட்ட அரசு #NowAtVikatan

தமிழக அரசு - ஊரடங்கு உத்தரவு
தமிழக அரசு - ஊரடங்கு உத்தரவு

8.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Jul 2020 2 PM

தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்குத் தடை!

தமிழகம் முழுவதும் காவலர்களின் நண்பர்கள் எனப்படும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பிரிவுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Friends of Police
Friends of Police

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸாருடன் இருந்த தன்னார்வலர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தன்னார்வலர்கள் 6 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.

08 Jul 2020 1 PM

அரசுப் பள்ளிகளில் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி!

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடங்கப்பட இருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரும் 13-ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்விமுறை தொடங்கப்படும் என்றார். தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளிலும் ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்பட இருக்கிறது.

பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13-ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று கூறிய அவர், கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

08 Jul 2020 10 AM

சாத்தான்குளம் வழக்கில் மேலும் 5 போலீஸார் கைது!

சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் தாக்கியதாலேயே அவர்கள் மரணமடைந்தததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதை ஏற்ற நீதிமன்றம், அதுவரை சிபிசிஐடி போலீஸார் வசம் விசாரணையை ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் உள்ளிட்டோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ஜெயராஜ்,  பென்னிக்ஸ்
ஜெயராஜ், பென்னிக்ஸ்

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளதாகத் தமிழக அரசு, நேற்று தெரிவித்திருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்புகொண்டு பேசியிருந்தார். இந்தநிலையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மேலும் 5 போலீஸாரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்
"நீங்கள் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர்!"- சிறைக்குள்ளும் தொடரும் சாத்தான்குளம் ஸ்ரீதரின் அத்துமீறல்

சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் வேல்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து மற்றும் தாமஸ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காலை முதல் விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது, அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு