Published:Updated:

தமிழகத்தில் 8 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு! - கொரோனா நிலவரம் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

08-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

08 Sep 2020 6 PM

8 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு!

தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4,74,940 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,012 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 பரிசோதனை
கோவிட்-19 பரிசோதனை

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,696 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது!

08 Sep 2020 11 AM

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடும் முழுவதும், காவல்துறையின் செயல்பாடு குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரித்த நிலையில், பின்னர் சிபிஐ விசாரிக்க தொடங்கியது.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

கொரோனா பரவல் காரணமாக சிபிஐ விசாரணையில் சில இடையூறுகள் வந்தாலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிபிஐ தெரிவித்துள்ளது.

08 Sep 2020 10 AM

பரமக்குடி: பெட்ரோல் குண்டு வீச்சு! - கார் வேன் கண்ணாடிகள் உடைப்பு

முக்குலத்தோர் தேவர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருப்பவர் பாண்டித்துரை. இவரது வீடு வேந்தோணி சாலையில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பாண்டித்துரை வீட்டின் முன்பு திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வேன் கண்ணாடிகளை அந்த கும்பல் அடித்து நொறுக்கியது. இந்தச் சம்பவம் நடந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் வருவதற்குள் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தச் சம்பவம் குறித்து வெளியூரிலுள்ள பாண்டித்துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாண்டித்துரை உடனடியாக வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். மேலும், தகவலறிந்து பரமக்குடி டி.எஸ்.பி வேல்முருகன் மற்றும் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அமுதா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தப் பகுதியைப் பார்வையிட்டனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கருணாஸ் எம்.எல்.ஏ நடத்திவந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து, பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த அமைப்பிலிருந்து விலகி `முக்குலத்தோர் தேவர் புலிப்படை’ என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் பாண்டித்துரை.

இச்சம்பவம் குறித்து முக்குலத்தோர் தேவர் புலிப்படை அமைப்பின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை, ``எனக்கு உறவினர்கள் மூலமோ தொழில் மூலமோ எந்தப் பகையும் இல்லை. அரசியல்ரீதியான பகை உள்ளது. அரசியல்ரீதியாக எனக்குப் பிடிக்காதவர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

08 Sep 2020 9 AM

இந்தியா - சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்!

இந்திய-சீன எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. ஒருபக்கம் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் எல்லையில் அத்துமீறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதற்கிடையே காட்டில் வேட்டையாடச் சென்ற நாச்சோ பகுதியைச் சேர்ந்த ஐந்து கிராமவாசிகள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

கிழக்கு லடாக் பகுதியிலிருக்கும் தெற்கு பாங்காங் சோ ஏரிக்கு அருகில் இருநாட்டு வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு