Published:Updated:

`கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு’ - தீவிர கண்காணிப்பில் குடும்பத்தினர் #NowAtVikatan

கர்நாடக அமைச்சர் கே.சுதாகர்
கர்நாடக அமைச்சர் கே.சுதாகர்

9-3-2020 | இன்றய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

09 Mar 2020 8 PM

கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய கர்நாடக அமைச்சர் கே.சுதாகர், ``பெங்களுரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர் மார்ச் 1-ம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார். மார்ச் 5-ம் தேதி அவருக்கு இதுதொடர்பான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவருடன் பயணித்த நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்படும்” என்றார்.

09 Mar 2020 5 PM

ஆப்கான் அதிபர் பதவியேற்பில் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி பதவியேற்றுக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து குண்டுவெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காபூலில் நடந்த இந்தக் குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் குறித்து எந்தத் தகவல் உடனடியாகத் தெரியவில்லை. தலிபான் தீவிரவாதிகளுடன் அண்மையில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

09 Mar 2020 1 PM

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு!

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நிலவி வரும் சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, ``கொரோனா விழிப்புணர்வு தொடர்பான குறும்படம் இன்று மாலை வெளியிடப்படும். அதில் கொரோனா குறித்த பல தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்து அச்சுறுத்தும் சூழலை உருவாக்க வேண்டாம். அத்தகைய நிலை தமிழகத்தில் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,22,318 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனா, தென்கொரியா, இரான், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த அனைவரையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தொலைபேசிகளின் வழியாக தொடர்பில் இருக்கிறோம். மக்கள் அனைவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சானிடைசரில்தான் கை கழுவ வேண்டும் என அவசியம் இல்லை. வீடுகளில் இருக்கும் சோப்புகளில் கை கழுவினால் போதுமானது. கூடுதலாக முகக்கவசங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முதல்வர் எங்களிடம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா குறித்த வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

09 Mar 2020 12 PM

அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

 `கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு’ - தீவிர கண்காணிப்பில் குடும்பத்தினர்
 #NowAtVikatan

மாநிலங்களவை தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க சார்பில், தம்பிதுரை, கே.பி முனுசாமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது நபராகக் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க சார்பில் அ.தி.மு.க-விடம் மாநிலங்களவையில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் கோரிக்கையை அ.தி.முக நிராகரித்துள்ளது!

` த.மா.கா ஓ.கே... தே.மு.தி.க...?!' - ராஜ்யசபாவை முன்வைத்து அ.தி.மு.க ஆடும் கபடி
09 Mar 2020 11 AM

பயோ மெட்ரிக் முறை நிறுத்தம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகப் பள்ளிகளில் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31 வரை ஆசிரியர்களோ, மாணவர்களோ பயோ மெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா குறித்து முதல்வர் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்!

09 Mar 2020 8 AM

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவையில், 2020 -21 -ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் மாநில நிதியமைச்சருமான பன்னீர் செல்வம், கடந்த மாதம் தாக்கல் செய்தார். பின்னர், பட்ஜெட் மீதான விவாதங்கள் நான்கு நாள்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், மார்ச் மாதம் 9 -ம் தேதி பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு தொடங்க முடிவுசெய்யப்பட்டது. இன்று, தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இன்றைய முதல்நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பும் தெரிவிக்கப்படும். பின்னர், சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும்!

அடுத்த கட்டுரைக்கு