Published:Updated:

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா... சென்னையில் 279 பேருக்கு பாதிப்பு! #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( விகடன் )

09-05-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

09 May 2020 7 PM

தமிழக அரசுக்கு எதிராக கேவியட் மனு தாக்கல்!

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் ஊட்டியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியம் என்பவர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியம், "உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாஸ்மாக்கைத் திறக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. மக்கள் அதிகாரம்‌‌ மற்றும் மகளிர் ஆணையம் சார்பில் கேவியட் எனும் எச்சரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எங்கள் தரப்பையும் அழைத்துக் கேட்கவேண்டும் என முறையிட உள்ளோம்" என்றார். இந்த மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.

09 May 2020 7 PM

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது.

09 May 2020 6 PM

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை!

கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதால் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்வையிட்டனர்.

09 May 2020 4 PM

பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு அமைப்பு!

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இக்குழு அரசுக்கு ஆலோசனை அளிக்கும்.

09 May 2020 3 PM

டீ கடைகள் திறக்க அனுமதி!

சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் டீ கடைகளை திறக்க அனுமதி அளித்து பார்சல்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும், கடைகளில் யாரும் அமர்ந்து டீ அருந்த கூடாது என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி கிடையாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம். சென்னையை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதி உண்டு. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும்வரை தொடரும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

09 May 2020 1 PM

டாஸ்மாக் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு!

தமிழகம் உள்பட நாடுமுழுவதும் மூன்றாம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதில் மதுக்கடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று முன் தினம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்ற அனுமதி வழங்கியது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

அப்படித் திறக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு, கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால் திறக்கப்பட்ட டாஸ்மாக்குகளை மூடகோரியது உயர்நீதிமன்றம். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

09 May 2020 11 AM

விவசாய மானியத்தைத் தமிழக அரசு தீர்மானிக்க வேண்டும்!

மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் தீர்க்கமான கொள்கை எனவே அவர்களுக்கான மின்சார மானியத் தொகை வழங்கும் முறையை தமிழக அரசே தீர்மானிக்க வகை செய்ய வேண்டும். மேலும் மின்சார சட்டத்திருத்தங்களை நிறுத்திவைக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

09 May 2020 9 AM

`இந்தியாவில் 60,000 -ஐ நெருங்கும் பாதிப்பு!’

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 -லிருந்து 59,662 -ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 -லிருந்து 1,981ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்
09 May 2020 7 AM

கொரோனா அப்டேட்!

கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி, 40,12,769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை என்பது 2,76,215 ஆக இருக்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 78,615 பேர் கொரோனா காரணமாகப் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 14 லட்சம் மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து தங்கள் வீடு திரும்பி உள்ளனர். சுமார் 23 லட்சம் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு