Published:Updated:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் #NowAtVikatan

ஆளுநர் - முதல்வர்
ஆளுநர் - முதல்வர்

09-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Jun 2021 6 PM

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கும்விதமாக இன்று ஆளுநரைச் சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த மாத இறுதியில் ஆளுநர் உரையுடன் சட்டபேரவைக் கூட்டத்தொடர் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பி்ன்போது, அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசின் தலைமைச் செயலர், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

09 Jun 2021 12 PM

`ஜூன் மாதம் 14-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!’

ஜூன் மாதம் 14-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இதற்காக டி.ஜி.பி அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``சென்னையில் வரும் 14-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் மனு தரப்பட்டுள்ளது. அதிமுக-வில் எந்தவித சலசலப்பும் இல்லை. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும்” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ``சசிகலா இல்லாமலேயே அ.தி.மு.க சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையே தொடரும்” என்றார். தொடர்ந்து, ``புதிதாக கட்சியின் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய மாட்டோம். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருமே கட்சியை வழி நடத்துவார்கள். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரையும் மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம்” என்றார்.

09 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 92,596 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,90,89,069 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,219. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,53,528 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா முடிவுகள்
கொரோனா முடிவுகள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,75,04,126-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 12,31,415 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,62,664 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 23,90,58,360 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

09 Jun 2021 9 AM

மும்பை: ஒற்றை இலக்கமாகக் குறைந்த கொரோனா உயிரிழப்பு!

மும்பையில் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்துவந்தது. ஏப்ரல் மாத இறுதியில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையாலும், மாநில அரசு கொண்டு வந்த கட்டுப்பாடுகளாலும் தொடர்ந்து குறைந்துவந்தது. கடந்த மார்ச் 28-ம் தேதிக்குப் பிறகு இப்போது மும்பையில் கொரோனா உயிரிழப்பு 7-ஆகக் குறைந்துள்ளது. தினத்தொற்றும் 673-ஆகக் குறைந்துள்ளது. கடைசியாக கடந்த மார்ச் 28-ம் தேதி கொரோனா தொற்று மூலம் எட்டுப் பேர் மும்பையில் உயிரிழந்திருந்தனர்.

கொரோனா சிகிச்சைப் பிரிவு
கொரோனா சிகிச்சைப் பிரிவு

அதன் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளது. மும்பையில் இதுவரை கொரோனாவுக்கு 15,073 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 15,701 பேர் மட்டுமே மும்பையில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் அளவு 95 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஒரே நாளில் மும்பையில் அதிகபட்சமாக 11,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா குறைந்திருப்பதால், மாநில அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறது. ஆனாலும் இன்னும் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த முறை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகுதான் மும்பையில் கொரோனா தொற்று அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஐயம்பெருமாள்

அடுத்த கட்டுரைக்கு