Published:Updated:

கிசான் நிதி மோசடி: `மத்திய அரசின் அறிவிப்பே காரணம்!’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

09-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

09 Sep 2020 2 PM

கிசான் நிதி மோசடி: முதல்வர் கருத்து!

தமிழகம் முழுவதும் கிசான் நிதித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது குறித்துப் பேசினார். ``13 மாவட்டங்களில், கடந்த நான்கு மாதங்களில் முறைகேடு நடந்திருக்கிறது. தமிழக அரசுதான் கிசான் நிதி முறைகேட்டைக் கண்டறிந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திவருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயி
விவசாயி

81 ஒப்பந்தப் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த நான்கு மாதங்களில் 41 லட்சத்திலிருந்து 46 லட்சமாக விவசாயிகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கிசான் நிதி முறைகேட்டுக்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம். விவசாயிகள் தாமாகப் பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதே பிரச்னைக்குக் காரணம்” என்றார் முதல்வர் பழனிசாமி!

09 Sep 2020 1 PM

எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

`தேசியக்கொடியை அவமதித்தது தொடர்பான முன்ஜாமீன் வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் வழக்கு, வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. `அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக் கூடாது’ எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

`வாழ்நாள் முழுவதும் அவமதிக்க மாட்டேன்!' - மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்
09 Sep 2020 1 PM

நீட் தேர்வை தள்ளி வைக்க!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

செப்டம்பர் 13-ல் நடைபெறவிருக்கும் நீட் தேர்வைத் தள்ளிவைக்க 20 மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவை வெளியிட்டிருக்கிறது. `யூஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகள் நீட் தேர்வுக்குப் பொருத்த முடியாது’ என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை தள்ளிவைக்க மறுத்துவிட்டது. மேலும், உச்ச நீதிமன்றம் ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

09 Sep 2020 10 AM

தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா நியமனம்!

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வின் நான்காவது பொதுச்செயலாளராக துரைமுருகனும், கட்சியின் எட்டாவது பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆ.ராசா
ஆ.ராசா

இந்த நிலையில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்!

09 Sep 2020 9 AM

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கொரோரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளன. இந்த நிலையில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தடுப்பூசி
தடுப்பூசி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராசெனிகாவும் இணைந்து தயாரித்த இந்தத் தடுப்பூசிமீது அதிக நம்பிக்கை இருந்துவந்தது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம்கட்ட பரிசோதனை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்றுவந்த நிலையில், தடுப்பூசிப் பரிசோதனை மேற்கொண்ட தன்னார்வலர் ஒருவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால், தற்போது பரிசோதனை நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தன்னார்வலருக்கு `விவரிக்க முடியாத அளவிலான உடல்நலக்குறைவு’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எனனென்ன பக்கவிளைவுகள் ஏற்பட்டன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. முதல் மற்றும் இரண்டாம்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு