முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! #NowAtVikatan

10-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தமிழக முதல்வர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வர் இல்லத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக 100 என்ற அவசர எண்ணில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல்விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதல்வரின் சென்னை இல்லத்துக்கும், சேலத்திலுள்ள இல்லத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் பேசிய நபர் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சோதனை நடத்தினர். முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லை என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது.
உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸ் ரத்து!
சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய இரண்டாவது உரிமை மீறல் நோட்டீஸையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. முதல் நோட்டீஸை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்திருந்த நிலையில் இரண்டாவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
உரிமை மீறல் நோட்டீஸ்... திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதாக குற்றம்சாட்டி, அவற்றை தி.மு.க உறுப்பினர்கள் அவைக்குள் கொண்டு சென்றனர். இது உரிமை மீறல் என்று கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. மேலும் விதிமுறைகளைப் பின்பற்றி புதிய நோட்டீஸை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து புதிய நோட்டீஸை உரிமை மீறல்குழு மீண்டும் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குகிறார் நீதிபதி.