Published:Updated:

டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ்... கொரோனா இல்லா மாநிலமான தமிழ்நாடு! -விஜயபாஸ்கர் அறிவிப்பு #NowAtVikatan

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

10-3-2020 |இன்றய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

10 Mar 2020 9 PM

கொரோனா இல்லா மாநிலமான தமிழ்நாடு!

தமிழர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 45 வயதாகும் இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. தற்போது இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் கடைசியில்தான் சென்னையிலிருந்து ஓமனுக்குச் சென்றுள்ளார். மீண்டும் சென்னை திரும்பியவர் காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் மார்ச் 5-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது அவரது டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ``நமது மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்வாக வந்துள்ளது. இந்த விரைவான மீட்பு சாத்தியமானது, தமிழ்நாடு சுகாதாரத்துறையின் துல்லியமான சிகிச்சை மற்றும் நிபுணத்துவத்தால் மட்டுமே. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது" என்று கூறியுள்ளார்.

10 Mar 2020 5 PM

ரஜினிக்கு எதிரான மனு தள்ளுபடி!

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

ரஜினி
ரஜினி

சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பெரியார் திராவிடர் கழகத்தின் உமாபதி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ரஜினி மீது வழக்குப் பதியக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

10 Mar 2020 3 PM

`மாஸ்டர்' படத் தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு புகார் வந்ததாகவும், அதையடுத்து நேற்று மாலை முதலே லலித் குமாருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர்
மாஸ்டர்

`பிகில்' விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் ஏற்கெனவே வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி இருந்தனர். வரும் 15ம் தேதி மாஸ்டர் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், தற்போது வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்பான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

CAA, ஐ.டி ரெய்டு, `விஜய் 65'... `மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவின் ஸ்கெட்ச்!
10 Mar 2020 2 PM

கொரோனா அச்சம்!

kodanad case
kodanad case

ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த குற்றம் சாட்டபட்டவர்கள், கொரோனா அச்சம் காரணமாக மாஸ்க் அணிந்தபடி வந்து ஆஜராகினர்.

10 Mar 2020 1 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது மக்களை கவலையடையச் செய்துள்ளது. கேரளாவில் ஏற்கெனவே 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 6 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ``7 -ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 31 -ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. 8, 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழக்கம் போல் நடைபெறும். டியூஷன் வகுப்புகள் முதலியன நடத்த 31 - தேதி வரை அனுமதியில்லை" என்றார்.

முன்னதாக கர்நாடக சுகாதாரத்துறையும் புதிதாக 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். மேலும், புனேவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 -ஐ நெருங்கியுள்ளதாக இந்தியா டுடே ஊடகம் தெரிவித்துள்ளது!

10 Mar 2020 1 PM

19 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா!

டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ்... கொரோனா இல்லா மாநிலமான தமிழ்நாடு! -விஜயபாஸ்கர் அறிவிப்பு #NowAtVikatan

மத்தியப் பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். விரைவில் அவர் பா.ஜ.க-வில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

10 Mar 2020 12 PM

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் சிந்தியா!

டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ்... கொரோனா இல்லா மாநிலமான தமிழ்நாடு! -விஜயபாஸ்கர் அறிவிப்பு #NowAtVikatan

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அமித் ஷாவும் உடன் இருந்தார். இது மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பு நடைபெற்ற சில நிமிடங்களில் ஜோதிர்ஆதித்யா சிந்தியா தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். அவரது ஆதரவாளர்களான 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பதிவி விலகினால், மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து வரும். பா.ஜ.க ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும்!

அவர் தனது கடிதத்தில், 18 வருடங்கள் கட்சிக்காக உழைத்ததாகவும் இது விலகுவதற்கான நேரம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் அரசியலுக்கு வந்ததற்கான நோக்கம் மக்களுக்குச் சேவை செய்யதான். காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு அதைச் செய்வது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை சிந்தியா வழங்கிய நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச அரசியலின் தற்போதைய நிலவரம் தொடர்பான முழுத் தகவல்களைக் கிழே உள்ள லிங்கில் தெரிந்துகொள்ளலாம்...!

`17 ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாயம்.. `ஸ்விட்ச்-ஆஃப்' சிந்தியா!'- சிக்கலில் கமல்நாத் அரசு
10 Mar 2020 11 AM

கொரோனா: விஜயபாஸ்கர் ட்வீட்!

தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வருகிறார். சற்று முன்னர் ட்விட்டரில் அவர், ``தமிழகத்தில் கொரோனா அறிகுறி எனப் பரிசோதனை செய்யப்பட்ட 8 சாம்பிள்கள், நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இது நல்ல செய்தி. இதில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் புதிய நபர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை எனது உறுதியாகியுள்ளது. கொரோனா தடுப்புக் கண்காணிப்பு தொடர்கிறது" என ட்வீட் செய்துள்ளார்.

10 Mar 2020 11 AM

சிந்தியா - மோடி சந்திப்பு..!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா டெல்லியில் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மோடியின் வீட்டுக்கு வருகை தந்துள்ளார். மத்தியப் பிரதேச அரசியலில் இந்தச் சந்திப்பு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் ஏற்கெனவே மாயமாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் பா.ஜ.கவில் இணைந்தாலோ அல்லது தங்களது பதவியை ராஜினாமா செய்தாலோ மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். மேலும் பா.ஜ.க பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் உருவாகும்.

மத்தியப் பிரதேச அரசியலின் தற்போதைய நிலவரம் தொடர்பான முழுத் தகவல்களைக் கிழே உள்ள லிங்கில் தெரிந்துகொள்ளலாம்...!

`17 ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாயம்.. `ஸ்விட்ச்-ஆஃப்' சிந்தியா!'- சிக்கலில் கமல்நாத் அரசு
10 Mar 2020 7 AM

உலகளவில் கொரோனா பலி 4,000-த்தைத் தாண்டியது!

கொரோனா
கொரோனா

உலகளவில் கொரோனாவின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தனிநபர் சுகாதாரம் மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 80,754 பேர் கொரோனா தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர். இதில் 59,905 பேர் குணமடைந்துள்ளனர். 3,136 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 9,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 463 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 4,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு