அண்ணா பல்கலை., மாணவர்களுக்கு ஆன்லைன் மறு தேர்வு; தேர்வுக் கட்டணம் இல்லை - தமிழக அரசு #NowAtVikatan

10-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று மட்டும் 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 232 பேர் மரணம் அடைந்துள்ளனர். 20 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் 7,149 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

பி.இ மாணவர்களுக்கு மறு தேர்வு
கடந்த நவம்பர் - டிசம்பர் மாத அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், முறையாக நடைபெறவில்லை என மாணவர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்தது. மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் 25% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் புதிதாக பதவியேற்ற அரசு, இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து மீண்டும் பருவத் தேர்வுகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அதன்படி நவம்பர் - டிசம்பர், ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த பி.இ செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைனில் மீண்டும் நடத்தப்படும். ஒரு மணி நேரத்துக்கு பதில் 3 மணி நேரமாக தேர்வு நடக்கும். பதில்களை தேர்வு செய்யும் முறை இல்லாமல், எப்போதும் போல அனைத்து வகை கேள்விகள் கொண்ட வகையில் தேர்வு வடிவமைக்கப்படும் என்றார். இந்த மறு தேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கடந்த தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே போதும்.
கடந்த தேர்வுகளை எழுதாத மாணவர்கள், புதிதாக கட்டணம் செலுத்தி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்ச்சி பெற்றவர்களும், கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் இந்த தேர்வை எழுதலாம். அப்படி எழுதும் மாணவர்கள், இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அந்த மதிப்பெண்ணே மாணவர்களின் மதிப்பெண்ணாக கருதப்படும். ஆன்லைன் தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர் பொன்முடி. இதன் மூலம் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என்றார்.

9 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு:
இன்று தமிழக காவல்துறையில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டி.ஜி.பி-யாக இருந்து வந்த ஷகீல் அக்தர் சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி-யாகவும், சிறப்பு டி.ஜி.பி தலைமையிடம் பொறுப்பில் இருந்து வந்த கந்தசாமி லஞ்ச ஒழிப்புதுறை டி.ஜி.பி-யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் ஈரோடு சிறப்பு அதிரடிப் படை கூடுதல் டி.ஜி.பி-யாக பதவி வகித்த ரவி, கூடுதல் டி.ஜி.பி (நிர்வாகம்) , உளவுத்துறை ஐ.ஜி-யாக பொறுப்பு வகித்த ஈஸ்வர மூர்த்தி உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐ.ஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்து வந்த திருநாவுக்கரசு எஸ்.பி.சி.ஐ.டி விங்க் 1 ( செக்யூரிட்டி பிரான்ச்) எஸ்.பி-யாகவும், நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன் ஐ.பி.எஸ் எஸ்.பி.சி.ஐ.டி விங்க் 2 ( செக்யூரிட்டி பிரான்ச்) எஸ்.பி-யாகவும் மாற்றப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி - யாக பதவி வகித்த அரவிந்தன் ஐ.பி.எஸ், எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.பியாகவும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி -யாக பதவி வகித்த சரவணன் ஐ.பி.எஸ் ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவு பிரிவு எஸ்.பியாகவும், டி.ஐ.ஜி.பி ( டெக்னிகல் சர்வீசஸ்) -ஆக பதவி வகித்த ஆசியம்மாள் ஐ.பி.எஸ் உளவுத்துறை டி.ஐ.ஜி-யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை தொடங்கி நடைபெற்றுவந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் மீண்டும் காரசாரமான விவாதம் கிளம்பியதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருவரும் இல்லாமல் தனபாலைத் தேர்வு செய்யலாம் என பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல் வெளியானது.
அப்போது எடப்பாடி தரப்பிலிருந்து அதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. மூன்று மணி நேரமாகக் கூட்டம் நடந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பல விவாதங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதையொட்டி, பன்னீர்செல்வம் கோபித்துக்கொண்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

அரிசி ரேஷன் கார்டுகளுக்கு முதற்கட்டமாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம்... முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
கொரோனா நிவாரண நிதியாக அரிசி ரேஷன் கார்டுகளுக்கு 4,000 ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின். அதையொட்டி முதல்வராகப் பதவியேற்றதும் அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முதற்கட்டமாக மே மாதத்திலேயே 2,000 ரூபாயும் , ஜூன் மாதத்தில் 2,000 ரூபாயும் தருவதாகத் தெரிவித்தார். இன்று முதற்கட்டமாக 2,000 ரூபாயை அரிசி ரேஷன் கார்டுகளுக்கு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்றார் கு.பிச்சாண்டி:
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் அமைச்சரான கு.பிச்சாண்டிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நாளை தமிழக சட்டப்பேரவை கூடும்போது கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
தொடங்கியது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்:
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ - க்கள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது . யார் அதிமுக-வின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை முடிவு செய்ய இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை பெரும் கூச்சல் மற்றும் குழப்பத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் இன்றாவது பன்னீர்செல்வமா, எடப்பாடி பழனிசாமியா யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை முடிவு செய்வார்களா என கட்சித் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,66,161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,26,62,575 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,754. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,46,116-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,86,71,222-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,45,237 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,53,818 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 17,01,76,603 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது...
தமிழகத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் மே 10-ம் தேதியான இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 4 மணி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கின்போது பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை எனவும், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தனியாகச் செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி - மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். அங்கும் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி உண்டு. டீக்கடைகளும் பகல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் வாடகை கார், ஆட்டோ ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் பகல் 12 மணிவரை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து இயங்கும். மக்கள் தடுப்பூசி போடுவதற்காக ஊரடங்கின்போது அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.