Published:Updated:

`தமிழகத்தில் ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,390’ - சுகாதாரத்துறை தகவல் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

10-6-2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

10 Jun 2020 8 PM

இனி எக்மோர் அல்ல... எழும்பூர் மட்டுமே!

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூரை, ஆங்கிலத்தில் எக்மோர் எனக் குறிப்பிட்ட வந்த நிலையில் இனி ஆங்கிலத்திலும் எழும்பூர் என்றே குறிப்பிட முடியும். இதே போன்று ட்ரிப்ளிக்கேன்தி (திருவல்லிக்கேணி) உள்ளிட்ட தமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்கள் இனி தமிழ் உச்சரிப்பில் தான் இருக்கும்.

10 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,927 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 36,841 ஆக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 19 மரணங்கள் கொரோனா காரணமாக நடந்துள்ளது. இதன் மூலம் கொரோனா காரணமாக தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 Jun 2020 3 PM

2,834 மருத்துவ பணியாளர்கள்! -முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் மருத்துவர்கள் , ஆய்வகப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பணிக்கு வரவுள்ளார்கள்.

10 Jun 2020 8 AM

தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கொரோனா பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

`தீவிர சிகிச்சையில் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்' - மருந்து அனுப்பி உதவிய ஆளுநர் தமிழிசை
ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன், உடல்நிலை குறைபாட்டினால் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கல்லீரல் பாதிப்பு, கொரோனா தொற்று... இப்போது எப்படியிருக்கிறார் ஜெ.அன்பழகன்?

அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ``தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு