Published:Updated:

தமிழகத்துக்கு வந்தது 85,000 டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி! #NowAtVikatan

COVAXIN
COVAXIN

10-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Jun 2021 10 AM

தமிழகத்துக்கு வந்த 85,000 டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி!

COVAXIN
COVAXIN

தமிழகத்துக்கு மேலும் 85,000 டோஸ் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. தடுப்பூசி தட்டுப்பாட்டால் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

10 Jun 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 94,052 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,91,83,121 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 6,148. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,59,676-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சராசரியாக தினசரி மரணங்களின் எண்ணிக்கை 2,000-ல் பதிவாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 6,148 பலி எண்ணிக்கை உயர்ந்ததுக்கு பீகார் மாநிலம்தான் காரணம். பீகார் மாநிலத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குளறுபடியைச் சரிசெய்து, அதுவும் கணக்கில் சேர்க்கப்பட்டதால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,76,55,493-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 11,67,952 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,51,367 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

10 Jun 2021 8 AM

ஊரடங்கு: மேலும் சில தளர்வுகள்?!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும், ஊரடங்கு அமல்படுத்தும் நிலையில் கொரோனா பரவியது. தொடர்ந்து தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் ஊரடங்கை முறையாகக் கடைபிடிக்காத காரணத்தால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது தற்போது அமலில் இருக்கிறது.

ஊரடங்கு தளர்வு
ஊரடங்கு தளர்வு
ஃபைல் போட்டோ

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில், தளர்வுகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர்குழுவுடனும் முதல்வர் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படியில் அடுத்த வாரத்துக்கான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு