Published:Updated:

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பிரீமியம் ஸ்டோரி
பி.பத்மநாபன்
பி.பத்மநாபன்

ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழை வோம். வாங்க நினைத்த பொருளோடு, வாங்க நினைக்காத நான்கைந்து பொருள்களையும் சேர்த்து வாங்குவோம். கடையை விட்டு வெளியே வந்த பிறகு, ‘ஏன் இத்தனை பொருள்களை வாங்கினோம்’ என்று தெரியாமல் முழிப்போம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘இம்பல்ஸ் பையிங்’ (Impulse Buying) என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணில்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கும் மனநிலை. இந்த மனநிலையில் சிக்காமலிருப்பதற்கான 10 விஷயங்களைச் சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

01 - வேண்டாம் கிரெடிட் கார்டு!

பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், ‘கிரெடிட் கார்டு இருக்கிறதே’ என்று பொருள்களை வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குச் சட்டென வந்துவிடுவீர்கள். முடிந்தவரை டெபிட் கார்டுகளையும் வீட்டில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது. கார்டில் பணம் இருக்கிறது என்பதால்கூட, தேவையில்லாத பொருள்களை வாங்கலாம். முடிந்த மட்டும் பட்ஜெட் போட்டு, தேவையான பணத்தை ரொக்கமாக எடுத்துச் செல்வது நல்லது.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

02 - தேவையான பொருள் மட்டும்!

நீங்கள் ஷாப்பிங் செல்லும் முன், உங்களுக்கு என்னென்ன பொருள்கள் தேவை என்று பட்டியல் போடுங்கள். அப்போதுதான் எது உடனடித் தேவையோ, அது மட்டுமே ஞாபகத்துக்கு வரும். சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடன் அந்தப் பொருள்களை மட்டும் வாங்குங்கள். அது தவிர்த்து கண்ணில்படும் பொருள்களை, பார்ப்பதுடன் மட்டுமே நிறுத்திக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் தேவைப்படும் அல்லது ஆறு மாதங்கள் கழித்து தேவைப்படும் என்பதற்காக இன்றே பொருள்களை வாங்க வேண்டாம்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

03 - டைம்பாஸ் ஷாப்பிங் தவிர்க்கவும்!

‘போரடிக்கிறது’ என்பதற்காக ஷாப்பிங் போகாதீர்கள். ஷாப்பிங் போனால் பொழுதுபோகும்; கூடவே பர்ஸும் காலியாகும். இன்னும் சிலர், மனவருத்தத்தில் அல்லது மனச்சோர்வின்போது, ‘விண்டோ ஷாப்பிங்’ செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். கடைக்குள் போய், என்னென்ன பொருள்கள் புதிதாக வந்திருக்கின்றன, அவற்றின் விலை என்ன என்பதை மட்டுமே பார்ப்பது அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், கடையில் இருந்து வெளியில் வரும்போது, கைநிறைய பொருள்களுடன் வரக்கூடும். அதனால் ‘விண்டோ ஷாப்பிங்’ வேண்டாம்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

04 - ஆஃபர் வலை!

‘இது வாங்கினால் அது ஃப்ரீ, அது வாங்கினால் இது ஃப்ரீ’ என ஆஃபர்கள் கடைகளில் அடிக்கடி போடப்படும். இந்த ஆஃபர் இன்னும் சில நாள்கள் மட்டுமே என்பார்கள். இந்த ஆஃபரை நாம் சுதாரிப்போடு கேட்காவிட்டால், அதில் நாமும் சிக்கி, தேவை இல்லாத பொருள்களை வாங்குவோம். பெரும்பாலான கடைகளில் மாத இறுதியில் ‘மன்த் எண்டு’ ஆஃபர்கள் வழங்குகிறார்கள். அதனால் அவசரப்பட வேண்டாம்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

05 - விளம்பர மாயை!

50% , 60% தள்ளுபடி என்பது மாதிரியான அதிரடி விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். விளம்பரங்கள் சொல்கிற மாதிரி 50%, 60% தள்ளுபடி சில பொருள்களுக்கு மட்டுமே இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் எந்த சாய்ஸும் இல்லாமல் தரத்திலும் குறைவானதாக அந்தப் பொருள்கள் இருக்கும். அதேபோல, இணையதளத்தில் அதிரடி ஆஃபர் விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும். அதுபோன்ற நேரங்களில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

06 - அவசரம் வேண்டாம்!

பெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான தேவை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை பற்றி சிந்திக்கவிடாமல், நம்மை வாங்க வைத்துவிடும். அதேபோல, மிக நிதானமாகவும் ஷாப்பிங் செய்ய வேண்டாம். ஒவ்வொரு பொருளையும் அதிகநேரம் பார்த்துக்கொண்டே இருந் தால், அதை வாங்காமல் இதை வாங்கலாம் என யோசித்து அதிகமான பொருள்களையும் வாங்க நேரிடும்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

07 - மளிகைக் கடைகளே பெஸ்ட்!

மளிகைச் சாமான்களை வாங்குவதற்காகவெல்லாம் சூப்பர் மார்க்கெட் பக்கம் ஒதுங்காதீர்கள். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைகளில் அல்லது ஹோல்சேல் கடைகளில் அந்தந்த மாதத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குங்கள். அங்குதான் ஆளை விழுங்கும் ஆஃபர்கள் அடிக்கடி இருக்காது. எனவே ஆஃபருக்காக, தேவையில்லாத பொருளை வாங்க வேண்டிய நிர்பந்தமும் இருக்காது. சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருள்களை விடவும், குறைவான விலையில் இங்கு வாங்கலாம். பணமும் மிச்சமாகும்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

08 - குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்றால் மட்டுமே அவர்களை ஷாப்பிங் அழைத்துச் செல்லலாம். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க ஷாப்பிங் செல்லும்போது குழந்தைகளையும் அழைத்துச் சென்றால், அவர்களுக்குப் பிடித்த மான பொருள்களை எல்லாம் கேட்பார்கள். உங்கள் பொருளாதார நிலை உங்கள் குழந்தைக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடைசியில் குழந்தை கேட்பதை வாங்கித் தர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

09 - செல்ஃப் செக்கிங்!

அதிரடி ஆஃபரில் இதுவரை உங்களுக்குத் தேவையான, சரியான பொருளைத்தான் வாங்கியிருக்கிறீர்களா, எந்தெந்தப் பொருளைத் தேவையில்லாமல் வாங்கியிருக்கிறீர்கள், அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன என்பதை பில் போடுவதற்கு முன்பாக ஒருமுறை செக் செய்யுங்கள். ஷாப்பிங் செய்வதற்காக பட்ஜெட் போட்ட தொகை எவ்வளவு, செய்திருக்கும் ஷாப்பிங் பொருள்களின் மதிப்பு எவ்வளவு என்பதை முன்பே கணக்கிட்டால், ஒருவேளை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவையற்ற பொருள்களைத் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.

தேவையில்லாத ஷாப்பிங்... தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

10 - தேவை, உடன் ஒருவர்!

ஷாப்பிங் செய்யப்போகும் முன் நம்மை பற்றி நன்கு அறிந்த, நம் நலனில் அக்கறைகொண்ட ஒருவர் (கணவரோ/மனைவியோ) உடன் இருந்தால், தேவையில்லாத பல பொருள்களை நாம் வாங்க மாட்டோம். நம் பர்ஸும் காலியாகாமல் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு