Published:Updated:

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

`கொரோனா வைரஸ் பாதிப்பால் தாய், தந்தையரை இழந்து, ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும், ஆந்திர அரசு 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும்’ என ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி, மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இட நெருக்கடி, மருத்துவர்கள் செவிலியர்கள் எனண்ணிக்கை குறைவு, அதிக அளவு மருத்துவக் கட்டணம், ஊரடங்கு விதிமுறை மீறல் எனப் பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களையும் முழுமூச்சாக திணறடித்துவருகிறது கொரோனா வைரஸ். இருப்பினும், விட்டுக்கொடுக்காமல், உயிரிழப்பைத் தடுக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றன இந்திய மாநிலங்கள்.

கொரோனா இரண்டாம் அலை
கொரோனா இரண்டாம் அலை

அந்த வகையில், ஆந்திர மாநில அரசாங்கம், கொரோனா தடுப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் இறப்புக்குப் பின்னாலும் சில எதிர்கால நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக, கொரோனா கால்சென்டர், கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச்சடங்கு நடத்த ரூ15,000, கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளின் அதிக கட்டண வசூலை தடுத்து, கட்டணத்தை அரசே தீர்மானித்தது, ஆரோக்கிய ஶ்ரீ சுகாதாரத் திட்டத்தின் கீழ் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தது என ஆந்திர முதல்வர் எடுத்துவரும் துரித நடவடிக்கைகள் மெச்சத் தகுந்தவை. அந்த வரிசையில் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

இது குறித்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ``நாடு முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா இரண்டாவது அலையால், குழந்தைகளின் நிலை பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள்தான் மிக அதிகமாக பாதிப்படைகிறார்கள். முக்கியமாக, இந்த வைரஸ் தொற்றால் தங்களின் தாய், தந்தையை இழந்து, ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் சூழலும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா: கொரோனாவே இல்லாத கிராமம்; ஆச்சர்யப்படுத்தும் ஊர்மக்களின் சுய கட்டுப்பாடு!

இதன் காரணமாக, ஆந்திர மாநில அரசாங்கம், குழந்தைகளின் நலனுக்காக ஓர் புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இந்தத் திட்டத்தின்படி, ``கொரோனா வைரஸ் பாதிப்பால் தாய், தந்தையரை இழந்து, ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும், ஆந்திர அரசின் சார்பாக 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" எனத் தெரிவித்தார். மேலும், ``குழந்தையின் பாதுகாவலர், இந்த டெபாசிட் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டியை எடுத்துக்கொண்டு, அந்தக் குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும்” எனவும் ஆந்திர முதல்வர ஜெகன்மோகன் ரெட்டி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

மேலும், இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுவரை ஆந்திர மாநிலத்தில், 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,09,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பால் 9,200 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 2,10,436 பேர் கொரோனாவுக்கான சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக ஆந்திராவில், மே 31-ம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு