Published:Updated:

‘இம்பல்ஸ் பையிங்...’ சிக்காமல் இருக்க 10 உஷார் டிப்ஸ்! - வீண்செலவைத் தவிர்க்க வழிகள்!

பெரிய மால்களுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டைத் தவிர்க்கப் பாருங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
ன்லைன் ஷாப்பிங் அதிகரித்திருக்கும் காலகட்டம் இது. தேவையுள்ள, தேவையற்ற பொருள்களுக்கான அனைத்து விளம்பரங் களையும் இணையம் நம் கண்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது. அதனால் ஈர்க்கப்பட்டு, ‘விலை குறைவாக இருக்கிறதே!’ என்பதற்காகக்கூட தேவையில்லாத பொருள்களை வாங்க நேரிடலாம். இதைத்தான் `இம்பல்ஸ் பையிங்’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

அதேபோல, ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைவோம். வாங்க நினைத்த பொருளோடு, வாங்க நினைக்காத நான்கைந்துப் பொருள்களை வாங்குவோம். கடையைவிட்டு வெளியே வந்த பிறகு, ‘ஏன் இத்தனை பொருள்களை வாங்கினோம்’ என்று தெரியாமல் முழிப்போம். இதுவும் ‘இம்பல்ஸ் பையிங்’தான். அதாவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கிற மனநிலை. இந்த மனநிலையைத் தூண்டி, குவித்து வைத்திருக்கிற பொருள்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரிய மால்களும், சூப்பர் மார்க்கெட்களும் பக்காவாகச் செய்கின்றன. இந்த வலையில் சிக்காமல் தேவையான பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்கு இதோ 10 வழிகள்.

‘இம்பல்ஸ் பையிங்...’ சிக்காமல் இருக்க  10 உஷார் டிப்ஸ்! - வீண்செலவைத் தவிர்க்க வழிகள்!

வேண்டாம் கிரெடிட் கார்டு

பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஏனெனில், ‘கிரெடிட் கார்டுதான் இருக்கிறதே!’ என்று பொருள்களை வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குச் சட்டென வந்துவிடுவீர்கள். எனவே, முடிந்த மட்டும் ரொக்கமாகப் பணம் தந்து பொருளை வாங்குங்கள்.

தேவையான பொருள் மட்டும்

நீங்கள் ஷாப்பிங் செல்லும் முன், உங்களுக்கு என்னென்ன பொருள் தேவை என்று பட்டியல் போடுங்கள். எது உடனடியாகத் தேவையோ, அது மட்டுமே ஞாபகத்துக்கு வரும். சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடன் அந்தப் பொருள்களை மட்டும் வாங்குங்கள். அது தவிர்த்து கண்ணில்படும் பொருள்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். பிற்பாடு தேவைப்பட்டால் வாங்குங்கள்.

டைம்பாஸ் ஷாப்பிங் தவிர்க்கவும்

வீட்டில் போரடிக்கிறது, ஷாப்பிங் போனால் பொழுதுபோறதே தெரியாது என்று நினைத்து ஷாப்பிங் போகாதீர்கள். ஷாப்பிங் போனால் பொழுதுபோகும்; கூடவே பர்ஸும் காலியாகும். எனவே, உங்கள் ஷாப்பிங்கை அதிகபட்சம் மாதம் ஒருமுறை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.

ஆஃபர் வலை!

இது வாங்கினால் அது ஃப்ரீ, அது வாங்கினால் இது ஃப்ரீ என ஆஃபர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அடிக்கடி போடப்படும். இந்த ஆஃபர் இன்னும் சில நாள்கள் மட்டுமே என்பார்கள். இந்த ஆஃபரை நாம் சுதாரிப்போடு கேட்காவிட்டால், அதில் நாமும் சிக்கி, தேவை இல்லாத பொருள்களை வாங்குவோம். தினம் ஆஃபர் சேல்ஸ் இருக்கும்! அவசரப்பட வேண்டாம். மாதம் இறுதியில் சில சூப்பர் மார்க்கெட்டுகள் ஆஃபர்களை வழங்குவார்கள். அதையும் கவனித்து வாங்கினால் காசை மிச்சப்படுத்தலாம்.

விளம்பர மாயை!

50% தள்ளுபடி, 60% தள்ளுபடி என்ற மாதிரியான அதிரடி விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். விளம்பரங்கள் சொல்கிற மாதிரி 50%, 60% தள்ளுபடி சில பொருள்களுக்கு மட்டுமே இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் எந்த சாய்ஸும் இல்லாமல் தரத்திலும் குறைவானதாக அந்தப் பொருள்கள் இருக்கும். கடைக்குப் போய் வெறுங்கையோடு திரும்ப மனமில்லாமல், வேறு ஏதேதோ பொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம். அதேபோல, இணைய தளத்தில் அதிரடி ஆஃபர் விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும். அதுபோன்ற சமயங்களில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.

‘இம்பல்ஸ் பையிங்...’ சிக்காமல் இருக்க  10 உஷார் டிப்ஸ்! - வீண்செலவைத் தவிர்க்க வழிகள்!

மளிகைக் கடைகளே பெஸ்ட்

உங்கள் வீட்டுக்கு அருகில் மளிகைக் கடைகளில் உங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குங்கள். அங்குதான் ஆளை விழுங்கும் ஆஃபர்கள் அடிக்கடி இருக்காது. எனவே, ஆஃபருக்காகத் தேவையில்லாத பொருளை வாங்க வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இருக்காது. பணமும் அதிகம் செலவழியாது.

குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்

உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்றால் மட்டுமே அவர்களை ஷாப்பிங் செய்யும்போது அழைத்துச் செல்லலாம். வீட்டுக்குத் தேவையான பொருள்களை எல்லாம் வாங்க ஷாப்பிங் செல்லும்போது குழந்தைகளையும் அழைத்துச் சென்றால், அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களை எல்லாம் கேட்பார்கள். உங்கள் பொருளாதார நிலை உங்கள் குழந்தைக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடைசியில் குழந்தை கேட்பதை வாங்கித் தர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அவசரம் வேண்டாம்

பெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான தேவை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கவிடாமல், நம்மை வாங்க வைத்துவிடும். அதேபோல, மிக நிதானமாகவும் ஷாப்பிங் செய்ய வேண்டாம். ஒவ்வொரு பொருளையும் அதிகநேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், அதை வாங்காமல் வெளியே வர மாட்டோம்.

பெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான தேவை, பட்ஜெட் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்க விடாமல், நம்மை வாங்க வைத்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செல்ஃப் ஆடிட்டிங் தேவை

அதிரடி ஆஃபரில் இதுவரை உங்களுக்குத் தேவையான சரியான பொருளைத்தான் வாங்கியிருக்கிறீர்களா, எந்தெந்தப் பொருளைத் தேவையில்லாமல் வாங்கியிருக்கிறீர்கள், அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன என்பதை என்றைக்காவது வீட்டில் ரிலாக்ஸாக இருக்கும்போது ஆடிட் செய்துபாருங்கள்! நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே புரியும்!

தேவை, உடன் ஒருவர்

நீங்கள் ஷாப்பிங் செய்யப்போகும் முன் உங்களைப் பற்றி நன்கு அறிந்த, உங்கள் நலனில் அக்கறைகொண்ட ஒருவர் (உங்கள் கணவரோ/மனைவியோ) உடன் இருந்தால், தேவையில்லாத பல பொருள்களை நாம் வாங்க மாட்டோம். நம் பர்ஸும் எப்போதும் கனமாகவே இருக்கும்.

இந்தத் தீபாவளி பண்டிகை முதல் ‘இம்பல்ஸ் பையிங்’ செய்யாமல், தேவையான பொருள்களை மட்டுமே வாங்கி, போதும் என்ற மனநிறைவுடன் வாழத் தொடங்குங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு