Published:Updated:

நூற்றுக்கு 10 ரூபாய் வட்டி... கோவா, சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா... ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...

ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...
பிரீமியம் ஸ்டோரி
ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...

ரொம்ப நல்லவன் என்று நம்பினோம்!

நூற்றுக்கு 10 ரூபாய் வட்டி... கோவா, சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா... ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...

ரொம்ப நல்லவன் என்று நம்பினோம்!

Published:Updated:
ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...
பிரீமியம் ஸ்டோரி
ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...

பேராசைக்காரர்கள் இருக்கும் வரை `சதுரங்க’ வேட்டையர்கள் முளைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்! இரிடியம், நாகரத்தினம், ஈமு கோழி, எம்.எல்.எம் மோசடி என தினம் ஒரு கும்பலின் மோசடி வெளிப்பட்டாலும், அதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் தேடி தேடிச் சென்று பலரும் ஏமாறுகிறார்கள். இப்படித்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கு பத்து ரூபாய் வட்டி, கோவா, சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா என்று ஆசைகாட்டி சுமார் 100 கோடி ரூபாயைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டியிருக்கிறார் மோசடிப் பேர்வழி ஒருவர்!

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்த நபர் தலைமறைவாகிவிட்டாலும், தன்னிடம் ஏமாந்தவர்களிடம் அவ்வப்போது நல்லவன்போல பேசிக்கொண்டும், பணத்தைச் சிறிது சிறிதாகக் கொடுத்துக்கொண்டும் இருந்துள்ளார். இதனால், இத்தனை நாள்களாகப் புகார் அளிக்காதவர்கள், மோசடிப் பேர்வழி முற்றிலும் தலைமறைவாகிவிட்டதால், இப்போது காலம் கடந்து புகார் அளித்திருப்பதுதான் இந்த விஷயத்தில் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களிடம்தான், கமலக்கண்ணன் என்பவர் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஒரு லட்சம் ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்று ஏமாற்றியிருக்கிறார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சிலரிடம் பேசினோம்... ‘‘சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் பரமக்குடியில் குடியேறினார். சில வாரங்களிலேயே அக்கம் பக்கத்தினரிடம் நெருங்கிப் பழகியவர், தன்னைப் பெரும் செல்வந்தராகக் காட்டிக்கொண்டார். மேலும், ஏரியாவில் சிலருக்கு அவசரத்துக்குப் பணம் கொடுத்து, கொடுக்கல் - வாங்கலிலும் பிரபலமானார். ஃபைனான்ஸ் தொடர்பாகப் பலருக்கும் ஆலோசனை சொன்னார். அப்படித்தான் அவர் வெளி மாநிலத்திலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்திருப்பதாகவும், அதற்கு பத்து சதவிகித வட்டி கிடைப்பதாகவும் கூறினார். அதைக் கேட்டு ஆசைப்பட்ட சிலர், லட்சக்கணக்கில் அவரிடம் பணம் கொடுத்தார்கள். ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டி கொடுத்தார். இதைக் கேள்விப்பட்டு மேலும் பலரும் கமலக்கண்ணனிடம் பணம் கொடுத்தார்கள்.

ஒருகட்டத்தில் பலரும் அவரிடம் முதலீடு செய்ய முண்டியடித்த நிலையில், அவர்களிடம் பணம் வாங்காமல் திருப்பி அனுப்பினார். ‘ஏற்கெனவே பணம் செலுத்தியிருக்கும் நிறுவனத்தில் இதற்கு மேல் பணம் கட்ட முடியாது. வேறு நிறுவனத்தைப் பார்க்கிறேன். அதுவரை உங்கள் பணம் என்னிடம் இருப்பது முறையல்ல. வேறு நிறுவனம் கிடைத்தவுடன் பணம் வாங்கிக்கொள்கிறேன்’ என்று சொன்னதால், ‘இந்தக் காலத்தில் இப்படியொரு நல்லவரா...’ என்று அவரை முழுமையாக நம்பினோம்.

நூற்றுக்கு 10 ரூபாய் வட்டி... கோவா, சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா... ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...

இதையடுத்து, பரமக்குடி அருகிலுள்ள எமனேஸ்வரத்தில் ‘ராயல் வெல்த் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கிய கமலக்கண்ணன், ‘உங்களிடம் ஒரு நிறுவனம் மூலமாகப் பணம் வாங்கினால்தான் உங்கள் பணத்துக்கு பாதுகாப்பு’ என்று சொன்னார். மேலும், ‘ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டியுடன் ஒரு கிராம் தங்கக்காசு, இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வட்டியுடன் கோவா டூர், மூன்று லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வட்டியுடன் சிங்கப்பூர் டூர்’ என்று விதவிதமான திட்டங்களை அறிவித்தார். இதனால் பலரும் நகைகளை விற்றும், சொத்துகளை அடமானம்வைத்தும் முதலீடு செய்தார்கள்.

இந்த நிலையில்தான் 2018, டிசம்பர் மாதம் திடீரென்று கமலக்கண்ணன் தலைமறைவாகி விட்டார். பலரும் அதிர்ச்சியடைந்து, அவரைத் தேடிய நிலையில், பலருக்கும் வெவ்வேறு நம்பர்களிலிருந்து போன் செய்தார். ‘வெளி மாநில நிறுவனம் ஏமாற்றிவிட்டது. ஆனாலும், எனது சேமிப்புகளையும் சொத்துகளையும் பணமாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதே வட்டியுடன் தருகிறேன்’ என்றார். அதன்படி சிலருக்கு பணமும் கொடுத்தார். அவ்வப்போது பரமக்குடிக்கு நேரில் வந்தவர், மேலும் சிலருக்கும் வட்டிப் பணத்தைக் கொடுத்தார். அவர் நேரில் வந்ததால், பலரும் அவரை மிகவும் நேர்மையானவர் என்று நம்பி போலீஸில் புகார் அளிக்கவில்லை. இப்படியே மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், கடந்த ஓரிரு வாரங்களாக அவரைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவரது அனைத்து செல்போன் எண்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. அதனாலேயே தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளோம்” என்றார்கள்!

நூற்றுக்கு 10 ரூபாய் வட்டி... கோவா, சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா... ரூ.100 கோடி ரூபாய் அபேஸ்...

அதிக பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் நாகராஜனும் ஒருவர். அவர் நம்மிடம், ‘‘பலருக்கும் அவர் அதிக வட்டி தந்ததை பார்த்துத்தான் அவர்மீது எனக்கு நம்பிக்கை வந்தது. மேலும் அவர் அறிவித்த சுற்றுலா திட்டங்களுக்கு ஆசைப்பட்டு, 22 லட்சம் ரூபாய் கட்டினேன்... மொத்தமும் போய்விட்டது. இப்படி மொத்தம் 330 பேர் அவரிடம் ஏமாந்துள்ளார்கள். சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டிவிட்டார் கமலக்கண்ணன்’’ என்றார் விரக்தியுடன்.

இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸார் நம்மிடம், ‘‘ஏமாந்தவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதைவிட ஒருவர் இவர்களை முட்டாளாக்கி ஏமாற்ற முடியாது. மூன்று ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு, இப்போது புகார் கொடுத்திருக்கிறார்கள். கமலக்கண்ணன் அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றிருக்கிறார்... அப்போது புகார் கொடுத்திருந்தால்கூட ஆளைப் பிடித்திருக்கலாம். மக்களாகத் திருந்தினால் ஒழிய, இது போன்ற மோசடிகள் குறையாது” என்றார்கள்.

நாகராஜன்
நாகராஜன்
கார்த்திக்
கார்த்திக்

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக்கிடம் பேசினோம். “கமலக்கண்ணனின் செல்போன் எண்களை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுவோம்” என்றார் சுருக்கமாக!

சொல்வதற்கு ஒன்றுமில்லை... பேராசை பெருநஷ்டம் என்பதைத் தவிர!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism