Published:Updated:

மந்திரச் சொற்களின் மாய ஊஞ்சல்

மருதகாசி
பிரீமியம் ஸ்டோரி
மருதகாசி

மருதகாசி 100

மந்திரச் சொற்களின் மாய ஊஞ்சல்

மருதகாசி 100

Published:Updated:
மருதகாசி
பிரீமியம் ஸ்டோரி
மருதகாசி

இலக்கியம்

ற்றதையும் பெற்றதையும் வைத்து ஒரு திரைப்பாடலை உருவாக்குவதைவிட, அனுபவங்களின் சாரத்திலிருந்து எழுதப்படும் பாடலே நின்று நிலைக்கும் தன்மையைப் பெறுகிறது. எளிய சொற்களை இசைக்கேற்பப் பொருத்துவதே திரைப்பாடல் என்கிற எண்ணத்தில் உழல்கிறோம். உண்மையில், திரைப்பாடல் வார்த்தைகளை மெட்டிற்கு பொருத்துவது மட்டுமே இல்லை. அது, குறிப்பிட்ட காட்சிக்கோ சூழலுக்கோ ஏற்புடைய அனுபவங்களை வழங்கி, அவ்வனுபவங்களை மேலதிக உணர்வுகளுக்கு இட்டுச் செல்வது.
மந்திரச் சொற்களின் மாய ஊஞ்சல்

எண்ணிக்கையில் மிக அதிக பாடல்களை எழுதிய மருதகாசி, அனுபவங்களைப் பாடலாக்கியவர்களில் முதன்மையானவர். தனக்கு முன்னே இருந்த திரைப் பாடலாசிரியர்களிலும் பார்க்க, தனித்துவமான அடையாளத்துடன் விளங்கியவர். தமிழாய்ந்த சொற்களைத் திரைப்பாடலில் தேர்ந்துகொடுத்த அவர், ஒவ்வொரு பாடலையும் ரசனைக்கும் கேட்புக்கும் உரியதாக ஆக்கி அளித்திருக்கிறார். அவருடைய மிகுதியான பாடல்கள் அனுபவங்களின் திரட்சியாக வெளிப்பட்டுள்ளன. இலக்கிய நுகர்வுக்கும் திரைப்பாடலில் இடமுண்டு எனச் சொல்லாமல் எழுதிக்காட்டிய பெருமை அவருடையது.

1960-ல் வெளிவந்த `ஆடவந்த தெய்வம்’ திரைப்படத்தில் `சொட்டு சொட்டுன்னு சொட்டுதுபாரு இங்கே / மழை / கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே’ எனும் பாடல் இடம்பெற்றிருக்கிறது. அப்பாடலை மேலோட்டமாக்க் கேட்டால், அது ஏதோ பெய்யத் தொடங்கும் மழை குறித்து நாயகனும் நாயகியும் பாடுவதாகத் தோன்றும். முதலிரு வரிகளை அவருமே அப்படித்தான் அமைத்திருக்கிறார். ஆனால், பாடலில் வரக்கூடிய ஏனைய வரிகளோ வாழ்வைப் பிரதிபலிக்கின்றன.

மருதகாசி
மருதகாசி

சொட்டுது, கொட்டுது என்கிற இரு சொல்லுக்கும் அவர் சொல்லியிருக்கும் பொருள் இருக்கிறதே அது அபாரம். `கஷ்டப்படும் ஏழை சிந்தும் / நெத்தி வேர்வைபோல / அவன் கஞ்சிக்காக கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே’ என்று சொட்டுதுவிற்கு உவமை சொல்லிய அவர், `முட்டாப்பயலே மூளையிருக்கா / என்று ஏழைமேலே / துட்டுப் படைச்சா சீமான் அள்ளிக் / கொட்டுற வார்த்தை போலே’ என கொட்டுதுவிற்கும் பொருள் சொல்லி வியக்க வைத்திருக்கிறார்.

காதலுற்ற நாயகனும் நாயகியும் மழையில் ஆடிப்பாடும் காட்சிக்கு ஏழைகளின் வாழ்வை எழுதவேண்டிய அவசியமில்லை. இருவருக்கும் இடையே உள்ள நேசத்தையும் நெருக்கத்தையும் எழுதினாலே போதும். ஆனால், மருதகாசியைப் பொறுத்தவரை கிடைக்கும் இடத்திலெல்லாம் வறியவர்களின் வருத்தங்களை வார்த்தைகளாக வடித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காட்சிக்கு மீறிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் எழுதும்முறையே அவருடைய தனித்துவமாக எனக்குப்படுகிறது. வார்த்தைகளை அவர் கையாளும்விதம் காட்சிக்கு வெளியே இருந்தாலும், அதன்மூலம் அவர் கட்டமைக்க விரும்பிய வெளி ரசனைக்குரியது. மழையைப் பற்றி ஏன் நாயகியும் நாயகனும் பாடவில்லை என யாரும் கேட்கப்போவதில்லை. காட்சியில் மழை பொழிகிறது. எனவே, காட்சிக்கு அப்பால் சென்று மழையை முன்வைத்து அவர் வாழ்வை எழுதவே எண்ணியிருக்கிறார். அவருடைய மொழிப்புலமை அளவில்லா உயரமுடையது.

பாபநாசம் சிவனின் சகோதரரான ராஜகோபால அய்யரிடம் பாடம் பயின்றவர். எனினும், சொல்முறையில் தனக்கென்றொரு பாணியை உருவாக்கியிருக்கிறார். சொல்லப்போனால், அவர் காலத்தில் புழங்கிவந்த திரைப்பாடல் மொழியிலிருந்து அவர் முற்றிலும் வேறு ஒரு மொழியைக் கண்டடைந்திருக்கிறார். திராவிட இயக்கம் மேலெழுந்துவந்த சூழலில், தேசிய சிந்தனையில் ஊறிய ஒருவர், தமிழாய்ந்த சொற்களைத் தேடித்தேடி பயன்படுத்தியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. கட்சி வேறுபாடுகள் கடந்து சகல கொள்கைகளையும் உள்வாங்கிய அவர், இடது சிந்தனைகளைப் பட்டுக் கோட்டையாருக்கு முன்பே திரைப்பாடல்களில் தந்திருக்கிறார்.

அன்றைக்குத் திரைப்பாடல்துறையில் ஏக அதிபதியாக விளங்கிய உடுமலை நாராயணகவியே மருதகாசியின் எழுத்துகளையும் சந்த நயங்களையும் வியந்திருக்கிறாரெனில், மேற்கொண்டு சொல்வதற்கு எதுவுமில்லை. உடுமலை, தனக்குப் பின்னே பாட்டெழுத வந்த மருதகாசியைச் சீடனாகவோ, மாணவனாகவோ கருதவில்லை. மாறாக, தன்னிலும் சிறந்த பாடலாசிரியனாக மதித்திருக்கிறார். ஒருவர் ஒரு துறையில் மேலெழுந்து வருகிறபோது, அவரைத் தாங்கிப்பிடிக்கவும் தக்கதைச் சொல்லித் தரவும் தயங்காதவர்களே ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள்.

மந்திரச் சொற்களின் மாய ஊஞ்சல்

மருதகாசியின் எழுத்துக்களில் தென்படும் நேர்த்தியும் இசை ஒழுங்கும் அலாதியானவை. நேரடித் தமிழ்ப் படங்களுக்கு அவர் எழுதிய பாடல்களைப் போலவே மொழிமாற்றுப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இது, சாதாரணமாக எல்லாருக்கும் வாய்த்துவிடும் ஆற்றலல்ல. கம்பதாசனுக்குப் பிறகு அவ்வாற்றல் பெற்ற ஒருவராக மருதகாசியைக் கருதலாம். 1976-ல் வெளிவந்த `நீ எண்ட லாகரி’ என்கிற மலையாளப் படம் தமிழில் `அவள் என் உயிர்’ என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது. விஸ்வாம்பரன் இயக்கிய அப்படத்திற்கு தேவராஜ் இசையமைத்திருக்கிறார்.

அப்படத்தில் `விண்ணில் மண்ணில் சங்கல்ப்பமெழுதிய / மகாகாவியமே மலையாளமே / எண்ட மலையாளமே’ என்றொரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. அவ்வரிகளைத் தமிழ்ப்படுத்திய மருதகாசி `விண்ணில் மண்ணில் / தங்கப்பண் முழங்கிய / மகாகாவியமே / மறையாகுமே / திரு மறையாகுமே’ என்றிருக்கிறார். `சங்கல்ப்பமெழுதிய’ என்பதற்கு `தங்கப்பண் முழங்கிய’ என்றெழுதியது பெரிதில்லை. `மலையாளமே’ என்பதற்கு `மறையாகுமே’ என்று எழுதியிருக்கிறாரே... அதுவே அழகு. ஏனெனில், மலையாளம் என்று வந்ததுமே தமிழென்றுதான் யோசிக்கத் தோன்றும். எழுதுவது மொழிமாற்றுப் பாடல் என்பதால் உதடசைவிற்கு ஏற்ப, மலையாளத்திற்குப் பொருத்தமாக மறையாகுமே எனும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். `சங்கல்ப்பமெழுதிய’ என்பதிலும் `தங்கப்பண் முழங்கிய’ என்பதிலும் இடறாத ஓசை ஒழுங்கை ரசிக்கலாம்.

மருதகாசியின் பாடல்களைக் கேட்கும்தோறும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது, அவருடைய ஒடிச்சொல் மேதைமை. ஒரு வரியுடன் அடுத்த வரியைத் தாளக்கட்டுடன் இணைக்கப் பயன்படுவதே ஒடிச்செல். அதைப் பெரும்பாலும் அசைச்சொல்லாகக் கருதி அதாவது, அர்த்தமற்றச் சொல்லாகக் கருதியே பாடகரும் பாடலாசிரியரும் ஏதாவது ஒரு சொல்லை உபயோகிப்பார். ஆனாலும், அதிலும் அர்த்தத்தைக் கொண்டுவரும் அசாத்திய மொழிப் பயிற்சியை மருதகாசி கொண்டிருக்கிறார். உதாரணமாக, `ஞானக்குழந்தை’ என்றொரு படம் 1979-ல் வந்திருக்கிறது. அதில், `ஓசை கொடுத்த நாயகியே / ஈசன் ஒரு பாதி தனைக்கொண்ட நான்முகியே’ என ஆரம்பிக்கும் பாடலைக் கேட்டிருக்கலாம். இசைமேதை கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த அப்பாடல், இசையின் பெருமையைப் பற்றியது.

மந்திரச் சொற்களின் மாய ஊஞ்சல்

பல்லவியின் இரண்டாவது பகுதியைப் பாடும்பொழுதே ஒடிச்சொல்லின் தேவை எழுவதாக கே.வி.எம் சொல்லியிருக்கிறார். `மாசில்லா பொற்றாளம் ஒலிக்க / இந்த மண்ணும் விண்ணும் கண்டு அதிசயிக்க / என்று பாடி, அடுத்த அடியை எடுக்க `தனதன’ தேவை. அந்த `தனதன'வுக்கு எத்தனையோ சொற்களைப் பயன்படுத்தலாம். அழகிய, புதுவித, அதிசய என சட்டென்று தோன்றுவதை இட்டு ஒப்பேத்தாமல், `சுரலய’ என்று மருதகாசி சொல்லியிருக்கிறார். பாடல் இசைகுறித்து என்பதால், சுரத்தையும் லயத்தையும் ஒடிச்சொல்லாக உபயோகப்படுத்தியிருக்கிறார். அந்த ஒற்றை ஒடிச்சொல்லில் பாடலின் அழகே கூடிவிடுகிறது.

அதேபோல `திங்கள் உறங்கிய போதும் / தென்றல் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா’ என்ற பாடலை எழுதும்போது அவர் அருகில் அவருடைய இளையமகன் மருதபரணி இருந்திருக்கிறார். அப்போது அவர் விளையாட்டாக `திங்களும் தென்றலும் உறங்கும்போது கண்கள் உறங்காமலா இருக்கின்றன’ என விளையாட்டாகக் கேட்டிருக்கிறார். அது நிமித்தம் மருதகாசி `காதல்’ என்னும் ஒடிச்சொல்லை ஓசையில் பொருத்தி, `கண்கள் உறங்கிடுமா / காதல் கண்கள் உறங்கிடுமா’ என்றிருக்கிறார். ஓசைக்கேற்ப எழுதுவதே திரைப்பாடல் என்கிற எண்ணத்தை அவர் தகர்த்திருக்கும் இடங்கள் இப்படி எத்தனையோ உண்டு.

பொதுவாகவே ஒரு திரைப்பாடல் குறிப்பிட்ட காட்சிக்கும் சூழலுக்கும் எழுதப்படுவதுதான் என்றாலும், பாடலாசிரியரின் மனப்பதிவில் அப்பாடல் குறித்த சித்திரம் இல்லாமல் போவதில்லை. அச்சித்திரத்தை அவர் எந்த அளவிற்குச் சிரத்தையுடன் கடத்துகிறார் அல்லது வரைகிறார் என்பதைப் பொறுத்தே பாடலின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டிய மருதகாசிக்கு வேளாண்மைக் குறித்து எழுதுவதில் சிக்கலே இருக்கவில்லை. `மனப்பாறை மாடுகட்டி’ என்றெழுதிய அவருக்கு எந்தப் பகுதியில் எந்த மாடு வளர்க்கப்படுகிறது எனவும் தெரிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, திரைப்பாடலில் அவர் ஒருவரே மனப்பாறை மாட்டுக்குள்ள சிறப்பையும், மாயவர ஏருக்குள்ள சிறப்பையும் சொல்பவராக இருந்திருக்கிறார். வாழ்விலிருந்து வரிகளை வரித்தவரென்று அவரை வியப்பதற்கு அதுவே காரணம்.

மாநில சுயாட்சி குறித்தும் மக்களுக்கான உரிமைகள் குறித்தும் இந்திய ஒன்றியத்தில் இன்றைக்கு எழும் குரல்களை அன்றே தம் திரைப்பாடல்களில் மருதகாசி முழங்கியிருக்கிறார். `இன்னொருவர் தயவெதற்கு / இந்நாட்டில் வாழ்வதற்’கு என்னும் பாடல் `தங்கரத்தினம்’ திரைப்படத்தில் வந்திருக்கிறது. அப்பாடல் வெளிவந்த சமயத்தில் தணிக்கைத்துறை அதிகாரியே தனியாக அழைத்து, கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வரிகளை நீக்கிவிடுங்கள் என்றிருக்கிறார்.

அப்படத்தில் நடித்த எஸ்.எஸ். ராஜேந்திரன் அப்போது தி.மு.க.வின் கொள்கைவீரராக அறியப்பட்டதாலும், திராவிடநாடு கோரிக்கையைக் கொண்டிருந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் பாடலுக்கு பங்கம் நேருமென்று அவ்வதிகாரி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனாலும், மருதகாசி அவ்வரிகளை நீக்க சம்மதிக்கவில்லை. `வந்தாரை வரவேற்று வாழவைத்த தென்னாடு / வள்ளுவனார் பொதுமறையை வழங்கிய நம்நாடு / இந்நாளில் பிறர் கையை எதிர்பார்த்து வாழுவதா / எந்நாளும் துயர்மேகம் நம்மீது சூழுவதா’ என்னும் வரிகளைக் கவனித்தால் அவை அப்பட்டமான அரசியலை முன்வைத்திருப்பது தெரியவரும். தென்னாடு எனும் ஒற்றைச்சொல்லில் வடவராதிக்கத்தை விமர்சித்திருக்கிறார்.

தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு என்கிற விரிந்த தளத்தில் திரைப்பாடல்களை ஆய்வுசெய்தால், உடுமலை நாராயணகவியைத் தொடர்ந்துவந்த மருதாசியின் சொல்லாடல்கள் வேறொரு புரிதலைத் தரக்கூடும். தனிப்பட்ட வாழ்வில் அனைவருடனும் இணக்கத்தைக் கடைபிடித்த அவர், அறச்சொற்கள் திரைப்பாடல்களில் இடம்பெறுவதை அறவே தவிர்த்திருக்கிறார். ஒருசொல் ஒருவரை மேம்படுத்தவேண்டுமே அன்றி, வெறுப்பையும் வேதனையையும் வழங்கக்கூடாது என்றிருக்கிறார். `அவன் அமரன்’ திரைப்பட பாடல் உருவாக்கத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் மருதகாசி நுழையும்போதே, அவர் காதில் அப்படத்தின் இசையமைப்பாளர் இப்ராஹிம் இசைத்த தத்தகாரம் காதில் விழுந்திருக்கிறது. `தானனா தன்னானனா, தானனா தன்னானனா’ என்னும் மெட்டே அது. தானனா தன்னானனாவுக்கு `காலணா மிஞ்சாதையா / காலணா மிஞ்சாதையா’ எனும் வார்த்தைகள் மருதகாசிக்குத் தோன்றிவிட, அதை எதேச்சையாக இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் பாடிக் காட்டியிருக்கிறார். சூழலுக்கும் காட்சிக்கும் பொருந்துவதாகக் கருதிய இயக்குநர், அதையே பயன்படுத்தலாம் என்றிருக்கிறார். அறச்சொற்களாக இருக்கின்றனவே என எவ்வளவோ மறுத்தும்கூட, அவ்வரிகளே பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மறுத்தும் பயன்படுத்தப்பட்ட அவ்வரிகள் பலித்திருக்கின்றன. படத்தைத் தயாரித்தவர்களுக்குப் அப்படத்தினால் காலணாவும் மிஞ்சாமல் போனதெண்ணி வாழ்நாளெல்லாம் மருதகாசி வருந்தியிருக்கிறார். அறிவியலுக்கோ, பகுத்தறிவிற்கோ ஒவ்வாத விஷயமே இதுவென்றாலும், சொற்களால் விளையும் நன்மைகளும் தீமைகளும் எத்தகையன என்பதை மறுப்பதற்கில்லை.

தாமே ஒரு திரைப்படத்தை தயாரித்து, அதனால் ஏற்பட்ட நஷ்டத்திலும் அதிருப்தியிலும் பாடல்துறையே வேண்டாமென விட்டுவிட்டுபோன மருதகாசிக்கு தோல்வியின் ரணங்கள் இல்லாமல் இல்லை. நூற்றாண்டைத் தொட்டிருக்கும் அவர், வாழ்விலிருந்து வார்த்தைகளை தேர்ந்து, அவற்றை அனுபவங்களாக அநேகப் பாடல்களில் மாற்றியிருக்கிறார். எந்த மனநிலையில் ஒருபாடல் நம் காதில் விழுகிறதோ, அதே மனநிலையில் ஒரு முழுநாளை நம்மால் கடத்திவிட முடியும். அதுமட்டுமல்ல, ஒருவரை சாந்தமாக்கவும் சைத்தானாக்கவும் சொற்களே போதுமானவை. மருதகாசியின் சொற்களோ மந்திரச் சொற்கள். காயத்திற்கு மருத்தாகவும் காதலுக்கு விருந்தாகவும் அமையும். அவர் திரைப்பாடல்கள் மந்திரச் சொற்களால் ஆடப்பட்ட மாய ஊஞ்சல்.

ஓவியம்: பாரதிராஜா