Published:Updated:

``பசிக்காம இருக்க வயித்துல ஈரத்துணி'’ - 103 வயதுப் பாட்டியின் கொரோனா வறுமை

103 வயதுப் பாட்டி ஹமிதாபீ
103 வயதுப் பாட்டி ஹமிதாபீ

கொரோனா தொற்றிலிருந்து மறுவாழ்வு கிடைத்தபோதும், வறுமையின் பிடியில் தவிக்கிறார் 103 வயதுப் பாட்டி ஹமிதாபீ.

வறுமையின் விதையை இம்மண்ணில் வேரூன்ற விதைத்திருக்கிறது கொரோனா. திரும்பும் பக்கமெல்லாம் பசிக்கொடுமை. இறுகப்பிடித்த வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு பிள்ளைகளின் பசியைப் போக்குவதற்காகப் போராடும் பெற்றோர், கண்ணீர் தோய்ந்த முகத்துடன் வீதியில் கையேந்தும் குழந்தைகள் என்று... இந்த நான்கு மாதங்களில் மனித சமூகம் நரக வாழ்க்கையை அனுபவித்துவருகிறது. இந்தக் கொடுமையிலிருந்து மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள், அறிவியலாளர்களும் சமூகப் பற்றாளர்களும்.

103 வயது மூதாட்டி ஹமிதாபீ
103 வயது மூதாட்டி ஹமிதாபீ

இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டுவந்த 103 வயதுப் பாட்டி, குடும்பத்துடன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், பொதுச் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பாட்டியின் பெயர் ஹமிதாபீ. 13 பிள்ளைகளைப் பெற்றெடுத்த இந்தப் பாட்டி, தன் வாழ்க்கையில் சந்திக்காத துயரமே இல்லை என்று சொல்லலாம்.

13 பிள்ளைகளில், பிரசவித்த சில நாள்களிலேயே 12 குழந்தைகள் இறந்துவிட்டனர். கடைசியாக, தவம் இருந்து பெற்ற ஒரே மகள் மட்டுமே இப்போது பாட்டிக்கு உறுதுணையாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில், ஹமிதாபீ பாட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் வசித்துவந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் வசித்த மக்கள், பாட்டியின் குடும்பம் மீது கோபம் கொண்டனர். ஊரிலிருந்து வெளியேறுமாறு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி
தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

இதனிடையே, பாட்டி கொரோனாவிலிருந்து பூரண குணம்பெற்று கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். ஏற்கெனவே கோபத்தில் இருந்த ஊர் மக்கள் மூதாட்டியை ஊருக்குள் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதுபற்றி செய்தி வெளியாகிய நிலையில், உள்ளாட்சி அலுவலர்கள் ஊர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். என்றாலும், பாட்டி வசிப்பது வாடகை வீடு என்பதால், வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியிருக்கிறார்.

துயரத்தின் எல்லைக்குத் தள்ளப்பட்ட பாட்டியின் நிலையை அறிந்த ஆம்பூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், பாட்டியின் வீட்டுக்கே சென்று 5,000 ரூபாய் பணம், அரிசி மூட்டை, காய்கறி, மளிகைப் பொருள்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினார். மாதாந்தர ஓய்வூதியத்தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

பாட்டியைக் கவனித்துக்கொள்ளும் அவரின் மகள் முபாரக்கிடம் பேசினோம். ``எங்களுக்குச் சொந்த ஊர் பேரணாம்பட்டு பக்கத்துல ஒரு கிராமம். அம்மாவுக்கு 103 வயசு ஆகுது. எனக்கு 58 வயசு நடக்குது. எனக்கு அஞ்சு வயசாகும்போதே அப்பா இறந்துட்டாரு. அதுக்கு அப்புறம், அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்து எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எனக்கு ஒரு மகள் இருக்கா. என் வீட்டுக்காரரும் என் மகளோட வீட்டுக்காரரும் இறந்துபோயிட்டங்க. இப்போ நாங்க மூணு பேரும் அநாதரவா இருக்கோம்.

என் பொண்ணு ஷூ கம்பெனியில வேலைக்குப் போயிட்டிருந்தா. அவளுக்கு மாசம் கிடைக்கிற 5,000 ரூபாய் சம்பளத்துலதான் குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துக்சு. அம்மாவுக்குக் கொரோனா வந்ததுனால எங்களையும் தனிமைப்படுத்தி வெச்சாங்க. இதனால என் மகளை வேலைக்கு வர வேண்டாம்னு கம்பெனிக்காரங்க சொல்லிட்டாங்க.

உதவிய எம்.எல்.ஏ வில்வநாதன்
உதவிய எம்.எல்.ஏ வில்வநாதன்

எங்களுக்குச் சொந்தமா வீடெல்லாம் இல்ல. ரேஷன் பொருளும் வாங்க முடியல. ஏன்னா, சொந்த ஊர்ல இருந்து இங்கு இருக்கிற கடைக்கு ரேஷன் கார்டை மாத்தாம விட்டுட்டோம்'' என்று முபாரக் சொல்ல, ``ஒரு வேளை சாப்பிடுறோம், ரெண்டு வேளை பட்டினி கிடக்கோம். பசிக்காம இருக்க வயித்துல ஈரத்துணி கட்டிக்கிறோம்'' என்கிறார் பாட்டி உடைந்த குரலில்.

``யாராவது உதவி பண்ணுங்க சாமி... உங்க பிள்ளை, குட்டிங்க நல்லா இருப்பாங்க. பசிக் கொடுமையைத் தாங்க முடியாம சில நேரத்துல கடைத் தெருவுக்கு போய் கையேந்தி பிச்சையெடுக்கிறோம். எங்க பிரச்னையை யார்கிட்ட சொல்றதுனு தெரியல’’ - முபாரக்கின் குரல் கனக்கிறது.

உதவும் கரங்கள் கிடைக்கட்டும்.

அடுத்த கட்டுரைக்கு