Published:Updated:

2015-ல் பெருவெள்ளம்... 2017-ல் வடகிழக்குப் பருவமழை... சென்னை திணறுவது ஏன்?

2015-ல் பெருவெள்ளம்... 2017-ல் வடகிழக்குப் பருவமழை... சென்னை திணறுவது ஏன்?
2015-ல் பெருவெள்ளம்... 2017-ல் வடகிழக்குப் பருவமழை... சென்னை திணறுவது ஏன்?

2015 மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டுவந்த சென்னையை, மறுபடியும் உருட்டிப் புரட்டியெடுக்க ஆரம்பித்திருக்கிறது 2017-ன் வட கிழக்குப் பருவமழை! 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஆரம்பித்த பருவமழை நவம்பர் முதல் வாரம் வரையிலும் வெளுத்து வாங்கியது. சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழ்நாடு முழுக்க வடகிழக்குப் பருவமழை பொழியத் தொடங்கியிருக்கிறது. 

சமீபகாலங்களில், சிறு தூறல் விழுந்தாலே, சென்னை நகர சாலைகள் வெள்ளக் காடாக மாறிவிடுகின்றன. இதன் தொடர்ச்சியாகப் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துவிடுவதால், மக்கள் நரக வேதனையை அனுபவித்துவருகின்றனர்

'சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் சிறு மழையையும்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யார் காரணம்? பருவநிலை மாற்றமா? அல்லது மழை நீர் வடிகால் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத ஆட்சியாளர்களின் அலட்சியமா?' - கேள்விகளுக்கு விடைதேடி கோட்டை வட்டாரத்தில் உள்ள உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். 

''சிற்றூரில் ஆரம்பித்து நகர்ப்புறங்கள் வரை அனைத்து இடங்களிலும் உள்ள ஏரி, குளம், வாய்க்கால் என நீர் சேகரிப்பு ஆதாரங்களை உள்ளூர் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை அப்பாவி மக்களிடம் விற்று பணம் சம்பாதிப்பதோடு, ஏற்கெனவே அங்கே வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு மின்சாரம், சாலை, குடும்ப அட்டை உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுத்து தங்கள் கட்சிக்கான நிரந்தர வாக்காளர்களாகவும் மாற்றிவிடுகின்றனர். இப்படி தங்களது சுயநலத்துக்காக நீர்ப்பிடிப்புப் பகுதிகளை குடியிருப்புகளாக மாற்றிவிட்டக் காரணத்தால், மழைக்காலங்களில் நீர் தேங்கிநிற்க வழியின்றி ஊருக்குள் பாய்ந்து வெள்ளச் சேதத்தை ஏற்படுத்துகிறது. 

இயற்கையைப் பொருத்தவரை, குளம், ஏரி என எல்லா நீர்ப்பிடிப்புப் பகுதிகளுமே மழைக்காலங்களில் சீரான அளவில்தான் நிரம்பிவரும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால்கூட, ஒரு குளம் நிரம்பி, மற்றொரு குளம் நிரம்பாமல் இருக்கிறது. இப்படி சமநிலைத் தவறியதற்குக் காரணம்... நீர்வழிப் பாதைகள் அங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதுதான். நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்படாத இடங்கள் வழியாக ஓடிவரும் மழை நீரானது நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் வடிந்துவிடுகிறது; அல்லது ஆறு, கடல் என நீரோட்டங்களில் போய் கலந்துவிடுகிறது. 

ஆண்டாண்டு காலமாகவே ஆக்கிரமிப்புத் தொல்லைகள் இருந்துவருகின்றன. ஆனால், குறிப்பாக 'ஒன் டைம் பட்டா' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நத்தம் புறம்போக்கு அல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு அரசாங்கமே பட்டா கொடுத்துவருவதால், நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் நீர்வழிப் பாதைகளிலேயே ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. அதனால்தான் இவ்வளவு துயரங்களும்.

நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகளை ஏற்படுத்திவிட்டால், மழைக்காலங்களில் நீரானது எந்த வழியில் செல்லும்? எந்த நீர்ப்பிடிப்புப் பகுதியில் போய் தேங்கும் அல்லது நீர் வடிகாலில் கலக்கும்? அதனால்தான் சின்ன மழைக்குக்கூட சாலையெங்கும் வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது; குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்துவிடுகிறது.

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், 'ஒன் டைம் பட்டா' என்று புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இதன்படி நத்தம் புறம்போக்கு அல்லாத இடங்களில் வசித்துவரும் ஏழைகளுக்கும் பட்டா கொடுப்பதுதான் இத்திட்டத்தின் அடிப்படை. இதன்படி, சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக நத்தம் அல்லாத புறம்போக்கு நிலத்தில் குடியிருந்துவருபவராக இருக்கவேண்டும். பட்டா வழங்கப்பட்டு முதல் 20 வருடங்களுக்குள் வேறொருவருக்கு வீட்டு மனையை விற்கக்கூடாது. அப்படியே விற்றாலும் இன்னொரு ஏழைக்குத்தான் அந்த மனையை விற்க முடியும். இப்படி நிறைய விதிமுறைகள் இந்த 'ஒன் டைம் பட்டா' விஷயத்தில் உண்டு. ஆனாலும், நடைமுறையில் இந்த விதிகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. 

நீர் வழிப்பாதைகளில் குடியிருப்புகள் இருந்தாலும்கூட அதையும் 'நத்தம் புறம்போக்காக' மாற்றி பட்டா கொடுக்கப்படுகிறது. கேட்டால், 'நீர்வழிப்பாதை இருக்கும் இடத்துக்கு பிரிட்டிஷ் காலத்திலேயே பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன' என்று உதாரணம் காட்டுவார்கள். உண்மைதான். ஆனால், அப்படி தங்கள் பட்டா நிலத்துக்குள் நீர் வழிப்பாதையைக் கொண்டிருப்பவர்கள் கட்டடம் எழுப்பும்போது, நீர்வழிப்பாதைக்கென தனியே இடம் ஒதுக்கிக் கட்டவேண்டும் என்பதுதான் பிரிட்டிஷ் காலத்துச் சட்டம். அந்த விதிமுறையானது அப்போது கறாராக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், இப்போது எந்த விதிமுறையும் கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. அதனால்தான்,  குடியிருப்புகளே இல்லாத இடங்களிலும் உள்ளூர் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து போலியான பெயர்களில் பட்டா பெற்றுவிடுகிறார்கள். அதே இடம் பின்னர் தனியார்களுக்கு விற்பனை செய்யப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

குடியிருப்புகளே இல்லாத காலி இடங்களுக்குக்கூட இத்திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றால், விதிகள் எப்படியெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியும். 

காஞ்சிபுரத்தில், மேய்ச்சல்கால் புறம்போக்கு நிலங்களில் நிறைய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆக, 'ஒன் டைம் பட்டா' திட்டம் யாருடைய நலனுக்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த நிலை முற்றிலும் மாறி, கட்சிக்காரர்களும், பெரும் பணம் படைத்தவர்களுமே மேலும் மேலும் சம்பாதித்துக்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்தத்திட்டம். லோக்கல் அரசியல்வாதிகளின் இந்த அத்துமீறலைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது ஆட்சியாளர்கள்தான். ஆனால், மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்துவரும் தி.மு.க., அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆட்சியாளர்களோ, 'இந்த முறை நாங்கள் சம்பாதித்துக் கொள்கிறோம்' என்ற போட்டி மனப்பான்மையோடுதான் செயல்படுகிறார்கள்.  

ஒவ்வொரு ஆண்டும் இந்த 'ஒன் டைம் பட்டா' வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், தி.மு.க ஆரம்பித்துவைத்த இந்தத் திட்டத்தை தற்போதைய அ.தி.மு.க அரசும் வருடம் தவறாமல் பின்பற்றி வருவதுதான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படைக் காரணம்.

ஏரி, குளம், வாய்க்கால் என நீர்ப் பிடிப்புப் பகுதிகளுக்கு நீர் வந்துசேரும் நீர்ப்பாதைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருப்போருக்கு பட்டா வழங்காமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பு வருவாய்த்துறையைச் சார்ந்தது. எந்த அடிப்படையில், அவர்கள் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்குகிறார்கள்? பட்டா மாற்றம் செய்கிறார்கள்? இதுபோன்ற விதிமீறல்களை 'ஜமாபந்தி' நிகழ்வுகளில் கண்டுபிடித்து பட்டாவை ரத்து செய்யும் அதிகாரமும் வருவாய்த்துறைக்குத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் செய்யப்படுவதில்லை. 

அடுத்ததாக, இந்தத் தவறையெல்லாம் கண்டுபிடித்துக் களையவேண்டியது  பதிவுத்துறைதான். இவர்களும் இதுபோன்ற அத்துமீறல்களைக் கண்டும் காணாமல் பத்திரப் பதிவு செய்துகொடுத்துவிடுகிறார்கள். இப்படி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கைகோத்துக்கொண்டு சட்டத்துக்குப் புறம்பாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டனர். இனிமேல் புதிதாக இதுபோன்ற அத்துமீறல் கட்டடங்கள் எழும்பாமல் தடுப்பதும், ஏற்கெனவே நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை அகற்றுவதும்தான் இதற்கான நிரந்தரத் தீர்வு.'' என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிமுடித்தனர்.

சமூகத்தின் மீது உண்மையான அக்கறையும் ஆர்வமும் கொண்ட அரசியல்வாதிகளை நாம் தேர்ந்தெடுக்காதவரையில், சென்னை வெள்ளத்தையும், அது தரும் போக்குவரத்து நெருக்கடியையும் புலம்பிக்கொண்டேதான் கடந்துபோயாக வேண்டும்!