Published:Updated:

`உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை!' - தேர்தல் ஆணையம் கண்டிப்பு #NowAtVikatan

10-12-2019 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம் ( Photo: Ashok Kumar / vikatan )
10 Dec 2019 8 PM

ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை!

`மக்கள் தேர்வு செய்யும் பதவிகள் ஏலம் விடப்படுவது அவர்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல். உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்!-  ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள்! #NowAtVikatan

சட்டத்துக்கும் மக்களாட்சித் தத்துவத்துக்கும் புறம்பாக நடைபெறும் இதுபோன்ற செயல்கள் வருந்தத்தக்கவை. மேலும், இதுபோன்ற செயல்கள் நடைபெறாவண்ணம் தேர்தல் அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

10 Dec 2019 7 PM

உதயநிதி பெயர் வாங்குவார்!

ஸ்டாலின் - உதயநிதி
ஸ்டாலின் - உதயநிதி

தி.மு.க இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கத் திட்டமிடப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் 1,20,000 அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்த சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ``நான் கலைஞரின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நன்றாக உழைப்பேன் என்ற பெயரை கலைஞரிடத்தில் வாங்கியிருக்கிறேன். நான் கலைஞரிடம் பெயர் வாங்கியது போல், உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

10 Dec 2019 7 PM

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

10 Dec 2019 7 PM

திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் காளஹதீஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலில் தீப வழிபாடு. வீடியோ: வீ. சிவக்குமார்

10 Dec 2019 7 PM

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம்!

திருவண்ணாமலை கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்குக் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரம் எதிரே உள்ள சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு சுமார் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை மீதும், மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டபோது கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தி முழக்கங்களை எழுப்பி, அர்த்தநாரீஸ்வரரைத் தரிசனம் செய்தனர். வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

10 Dec 2019 1 PM

மதுரை மேலமாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெற்று வரும் காட்சி

10 Dec 2019 12 PM

`எகிப்து’ வெங்காயம்!

நாடு முழுவதும் வெங்காய விலை குறித்த பேச்சு தான். விலையை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய மாநில அரசுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த வெங்காயம் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் எகிப்து நாட்டில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துள்ள வெங்காயம், ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10 Dec 2019 1 PM

எகிப்து நாட்டில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துள்ள வெங்காயம். ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

10 Dec 2019 11 AM

மறைமுக தேர்தலுக்குத் தடையில்லை!

மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மறைமுக தேர்தலுக்காகத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறபித்தது சட்டவிரோதம் இல்லை எனக் கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

10 Dec 2019 10 AM

நித்யானந்தா போலத்தீவு வாங்கி முதல்வராகிவிடுங்கள்!

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பில்லை என்பதால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தோம். தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தொடர்ந்து குழப்பமான முடிவு எடுத்து வருகிறது. அவர்கள் மக்களை ஏமாற்றுவது தி.மு.கவின் அறிக்கையிலேயே தெரிகிறது.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் மட்டுமல்ல தமிழகத்தில் வேறு யாரெல்லாம் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் நித்யானந்தா போல ஒரு தீவு வாங்கி, அங்கே உங்களை நீங்களே முதல்வராக அறிவித்துக்கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்களிடம் இருக்கும் பணத்துக்குக் கண்டிப்பாகத் தீவு வாங்கி முதல்வராகலாம், ஆனால் தமிழகத்தில் முதல்வராகவேண்டும் என்பது நிச்சயம் நடக்காது. அது அ.தி.மு.கவால் மட்டுமே முடியும்” என தெரிவித்துள்ளார்.

10 Dec 2019 8 AM

கட்டாயம் அவைக்கு வர வேண்டும்!

மக்களவையில் நேற்று நள்ளிரவு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறிய நிலையில், இன்றும் மற்றும் நாளையும் அனைத்து பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர்களும் கட்டாயம் அவைக்கு வர வேண்டும் என அக்கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

10 Dec 2019 8 AM

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா!- வரவேற்பும் எதிர்ப்பும்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நள்ளிரவு நிறைவேறியது. சுமார் 7 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் நீடித்த இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் முடிவில் நள்ளிரவில் 311 உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா.

மோடி
மோடி

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ``மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவான விவாதத்துக்குப் பின்னர் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மசோதா இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழைமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

இந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இந்த மசோதா தொடர்பான விளக்கங்களைச் சிறப்பாக வழங்கினார். விவாதத்தின்போது அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கும் சிறப்பாக பதில் வழங்கினார்” என்றார்.

சசி தரூர்
சசி தரூர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இன்று மசோதா நிறைவேற்றியதற்கு பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா தொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ``இன்று நமது அரசியலமைப்புக்கு ஒரு கறுப்பு நாள். ஏனெனில் இன்று இங்கு நடந்தது அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த மசோதா தெளிவாக இஸ்லாமிய சமூகத்தை குறிவைக்கிறது, இது மிகவும் வெட்கக்கேடானது” என்றார்.