Published:Updated:

நாடு முழுவதும் அமலானது குடியுரிமை திருத்தச் சட்டம்?- உள்துறை அறிவிப்பு #NowAtVikatan

10.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
10 Jan 2020 10 PM

குடியுரிமை திருத்தச் சட்டம்- உள்துறை அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்றிலிருந்து நாடு முழுவதும் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ தகவல் வெளியிட்டுள்ளது. அரசிதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 Jan 2020 8 PM

புனேவில் இந்திய இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி20 ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களால களமிறங்கிய தவான் - ராகுல் ஜோடி இந்திய அபாரமான தொடக்கம் அளித்தது. முதல் 10 ஓவர்களுக்கு விக்கெட் இழக்காத இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் இறுதிக்கட்டத்தில் ஷ்ரதுல் தாக்கூரின் அதிரடியால் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 201 ரன்கள் எடுத்தது.

10 Jan 2020 4 PM

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்!

மோடி, அமித் ஷா குறித்து பேசியதற்காக கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழ் அறிஞர் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நெல்லை கண்ணன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். எதிர் தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தத்தால் நெல்லை கண்ணனை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

10 Jan 2020 5 PM

எஸ்.எஸ்.ஐ வில்சன் விவகாரத்தில் சிக்கிய இருவர்?

நாடு முழுவதும் அமலானது குடியுரிமை திருத்தச் சட்டம்?- உள்துறை அறிவிப்பு #NowAtVikatan

கன்னியாகுமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டில் சந்தேகத்தின் பேரில் சையது இப்ராகிம், அப்துல்லா என்ற இருவரை பிடித்து பாலக்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலக்காடு டவுண் சவுத் போலீஸ் ஸ்டேசனில் கேரள போலீஸாருடன், தமிழக கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 Jan 2020 1 PM

எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10 Jan 2020 11 AM

`இணையதளம் மூலம் கருத்துக் கூறுவது அடிப்படை உரிமை!'

இணையதளம் மூலம் கருத்துக் கூறுவது அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் இணையதள சேவை, பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கருத்து சுதந்திரம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வது நீதிமன்றத்தின் கடமை என்று குறிப்பிட்டனர். மேலும், காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து 7 நாள்களில் பரிசீலிக்கவும் உத்தரவிட்டனர். அதேபோல், இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது அடிப்படை உரிமை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அது சட்டப்பிரிவு 19-ன் கீழ் வருவதாகவும் தெரிவித்தனர்.

10 Jan 2020 8 AM

ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு! உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டதுடன் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அத்துடன் இணைய சேவை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.

10 Jan 2020 7 AM

இரான் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்ந்த உக்ரைன் விமானம்?

தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

உக்ரைன் விமான விபத்து
உக்ரைன் விமான விபத்து
AP

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிப் புறப்பட்ட போயிங் 737-800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த பயணிகள் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. இந்த நிலையில், உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, `உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பல்வேறு உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அமெரிக்கா தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.