Published:Updated:

தமிழக பா.ஜ.க தலைவரானார் எல்.முருகன்! - ஜெ.பி நட்டா அறிவிப்பு #NowAtVikatan

எல்.முருகன்
எல்.முருகன்

11-3-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

11 Mar 2020 5 PM

தமிழக பா.ஜ.க தலைவரானார் எல்.முருகன்!

தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழிசை கவர்னர் ஆக சென்ற பிறகு தமிழக பா.ஜ.க தலைவர் பதவி காலியாக இருந்தது. பல மாதங்களாக புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்தப் பதவிக்கு பல தலைவர்கள் போட்டிபோட்டதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், தற்போது எல்.முருகன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

11 Mar 2020 3 PM

பா.ஜ.க-வில் ஐக்கியமானார் சிந்தியா!

காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகிய நிலையில் இன்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா. மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சிந்தியா கூறியிருந்தார். அவர் விலகுவதற்கு முன்பே கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியது காங்கிரஸ்.

11 Mar 2020 1 PM

கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் கர்நாடகாவில் உயிரிழப்பு!

கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் கர்நாடகாவில் உயிரிழந்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய 76 வயது நபருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கல்புர்கியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர் இன்று உயிரிழந்துள்ளார் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும் கொரோனா வைரஸால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது உறுதியாகவில்லை என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

11 Mar 2020 11 AM

யாருக்கு அதிகாரம்!

புதுச்சேரியில், அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவது தொடர்பான மேல்முறையீட்டு மனுவில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அன்றாட அரசின் நடவடிக்கைகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், ஆளுநர் கிரண்பேடி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னர், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்த நீதிபதிகள், ஆளுநருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தின்படி ஆளுநரும் அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11 Mar 2020 10 AM

நளினியின் மனு தள்ளுபடி!

நளினி
நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த மனுவில், அரசு விடுதலை செய்யப் பரிந்துரை செய்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதம் செய்வதால்தான் சட்டவிரோதக் காவலில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

11 Mar 2020 9 AM

மாவட்டச் செயலாளர்களை மீண்டும் சந்திக்கும் ரஜினி! #NowAtVikatan

ரஜினி
ரஜினி

மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைக் கடந்த 5-ம் தேதி ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் கட்சி தொடங்குவது, முறையாகப் பணி செய்யாமல் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் எனக் கூறியது பெரும் விவாதமானது. அந்த ஏமாற்றம் குறித்து வெளிப்படையாகப் பதிலளிக்காத ரஜினி தகுந்த நேரத்தில் அது தொடர்பாகப் பேசுவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினி நாளை மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை மீண்டும் சந்தித்துப் பேச இருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலகட்டத்தில் ரஜினி மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்க இருக்கும் தகவல், அவரது அரசியல் கட்சி அறிவிப்புக்கு நேரம் நெருங்கி விட்டதாகக் கூறுகிறார்கள் சிலர். எனினும் மன்ற நிர்வாகிகள் சிலருடன் பேசிய போது, ஆகஸ்ட்டில்தான் கட்சி அறிவிப்பு இருக்கும்.. அது உறுதி என்கிறார்கள்..!

அடுத்த கட்டுரைக்கு