Published:Updated:

`சென்னையில் கொரோனா பரிசோதனை; 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்!’ - மாநகராட்சி ஆணையர் #NowAtVikatan

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

11.6.2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

11 Jun 2020 7 PM

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை!

சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், `இனிவரும் காலங்களில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால், தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்’ என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

11 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,716 ஆக பதிவாகியுள்ளது. மேலும் மாநிலத்தில் 1,372 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் ஒரே நாளில் தமிழகத்தில் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.90% ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,839 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6,55,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,406 பேருக்கு தொற்று உறுது செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு 27,398 ஆக அதிகரித்துள்ளது.

11 Jun 2020 4 PM

360 ஆக உயர்ந்த கட்டுப்பாட்டு பகுதிகள்!

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. திரு.வி.க நகர் மண்டலத்தில் 54 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

11 Jun 2020 4 PM

சென்னையில் 15 நாள்களுக்கு கடைகளை அடைக்கத் தயார்!

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பொது முடக்கம் கொண்டு வரப்படும் என்ற பேச்சு அடிபடுகிறது. சென்னை உயர் நீதிமன்றமும் இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால், 15 நாள்களுக்கு கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

11 Jun 2020 2 PM

சென்னையில் பொதுமுடக்கம் தீவிரப்படுத்தப்படுமா?

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

`சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு நோய்த் தொற்றை குறைக்க பொதுமுடக்கம் தீவிரப்படுத்தப்படுமா' என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நாளை பதிலளிக்க உத்தவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!

11 Jun 2020 1 PM

சென்னை ஐ.ஐ.டி முதலிடம்!

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்தது. இந்தப் பட்டியலில் ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரு 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி ஐ.ஐ.டி மூன்றாம் இடத்தில் இருக்கிறது!

11 Jun 2020 11 AM

ராயபுரம் குழந்தைகள் காப்பக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி!

நாடு முழுவதும் உள்ள குழந்தைக் காப்பகங்களில் கொரோனா பரவுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராயபுரத்தில் இருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த 35 சிறுவர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இருந்த சுமார் 55 சிறுவர்கள் தற்காலிகமாக அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நடந்த சோதனையில் கடந்த சில நாள்களுக்கு முன் 35 சிறுவர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. விடுதிக் காப்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மூலமாக சிறுவர்களுக்குக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

Corona
Corona

இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா பரவல் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இதில், ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

`35 சிறுவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்’ - சென்னை அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய வைரஸ் தொற்று!
11 Jun 2020 11 AM

இந்தியாவில் 2.86 லட்சம் பேருக்குப் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,583-இலிருந்து 2,86,579 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 9,996 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 357 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745-இலிருந்து 8,102 ஆக அதிகரித்திருக்கிறது.

`பரிசோதனையில் நெகட்டிவ்; தனிமை வார்டு மனஉளைச்சல்!' -கேரள கொரோனா வார்டில் விபரீத முடிவெடுத்த 2 பேர்
கொரோனா
கொரோனா

அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206-இலிருந்து 1,41,029 ஆகவும் உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் 1,37,448 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 70,39,918 ஆக உயர்ந்திருக்கிறது. உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,04,396 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு