Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பாடையில் இருசக்கர வாகனம்! - கோவையில் காங்கிரஸார் நூதன போராட்டம் #NowAtVikatan

ஸ்டாலின் ஆய்வு
ஸ்டாலின் ஆய்வு

11-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Jun 2021 3 PM

மும்பை புதிய விமான நிலையத்திற்கு பால்தாக்கரே பெயர் வைக்க எதிர்ப்பு!

மும்பையில் தற்போது இருக்கும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை மேற்கொண்டு விரிவுபடுத்த முடியாத நிலை இருப்பதால் எதிர்காலத்தேவையை கருத்தில் கொண்டு நவிமும்பையில் புதிய விமான நிலையம் கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இத்திட்டம் கடந்த பாஜக ஆட்சியில் புத்துயிர் பெற்று பணிகள் தொடங்கியது. பல ஆண்டுகளாக இதற்கு கிராம மக்கள் நிலம் கொடுக்க மறுத்து வந்த நிலையில் அவர்களிடம் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்து கொடுத்து அனைவரையும் சம்மதிக்க வைத்தனர். கட்டுமானப்பணிகளும் தொடங்கியது. ஆனால் இப்போது மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் கட்டுமானப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்காக ஒரு ஆற்றின் வழித்தடத்தை திருப்பி விட்டுள்ளனர்.

மனித சங்கிலி போராட்டம்
மனித சங்கிலி போராட்டம்

அதோடு ஒரு சிறிய மலை குன்றை கடந்த பல மாதங்களாக உடைத்து அதன் கழிவுகளை கடற்கரையில் போட்டு விமானநிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தி வருகின்றனர். கடற்கரையையொட்டி அமைய இருக்கும் இந்த விமான நிலையத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதில் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு இந்த விமான நிலையத்திற்கு மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பெயர் வைக்க முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விமான நிலையத்திற்கு பால்தாக்கரே பெயர் வைக்கும் முடிவை அறிவித்தார்.

ஆனால் இந்த விமான நிலையத்திற்கு விவசாயிகள் சங்கத்தலைவர் டி.பி.பாட்டீல் பெயர் வைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைக்கு ஆதரவாக பாஜக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். டி.பி.பாட்டீல் பெயர் வைக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். டி.பி.பாட்டீல் பெயரை விமான நிலையத்திற்கு சூட்டி அவரை கவுரப்படுத்தவேண்டும் என்று பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டதற்கு, ``டி.பி.பாட்டீல் மீது அரசு மரியாதை வைத்துள்ளது. வேறு ஒரு நல்ல திட்டத்திற்கு டி.பி.பாட்டீல் பெயர் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாக்பூரில் இருந்து மும்பைக்கு அமைக்கப்படும் விரைவு சாலைக்கு பால்தாக்கரே பெயரை சிவசேனா சூட்டியுள்ளது. இந்த சாலை திட்டமும் கடந்த பாஜக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே மும்மையில் பால்தாக்கரே சிலை வைக்கவும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்பை மீறி சிலை திறக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து திட்டங்களுக்கும் பால்தாக்கரே பெயரை சூட்டி வருவது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

- ஐயம்பெருமாள்

11 Jun 2021 11 AM

கோவையில் காங்கிரஸார் நூதன போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். கோவை அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸார், இருசக்கர வாகனத்தைப் பாடையில்வைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- குருபிரசாத், படங்கள்: விஜய்

11 Jun 2021 11 AM

கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நாளை மேட்டூர் அணையைத் திறந்துவைக்கவிருக்கும் நிலையில் முதலமைச்சர் இன்று கல்லணையில் ஆய்வு.

11 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 91,702 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,92,74,823 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,403. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,63,079-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா முன்களப் பணியாளர்கள்
கொரோனா முன்களப் பணியாளர்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,77,90,073-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 11,21,671 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,34,580 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 24,60,85,649 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

11 Jun 2021 9 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வு! - காங்கிரஸ் போராட்டம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்ட நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று போராட்டம் நடைபெறவிருக்கிறது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு