Published:Updated:

`ஒரே நாளில் 5,834 பேருக்குத் தொற்று; 6,005 பேர் டிஸ்சார்ஜ்!’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

கோவிட் - 19
கோவிட் - 19

11.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,005 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,159 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

சென்னையில் மேலும் 986 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 986 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,054 ஆக அதிகரித்துள்ளது.

11 Aug 2020 3 PM

கொரோனா தடுப்பு மருந்து - அதிபர் புதின்

தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து
மாதிரி புகைப்படம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்தத் தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், `என் மகள்களில் ஒருவர் இந்தத் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார்’ என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருந்து உற்பதியைப் பன்மடங்கு பெருக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

11 Aug 2020 12 PM

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டுள்ளார்.

`ஒரே நாளில் 5,834 பேருக்குத் தொற்று; 6,005 பேர் டிஸ்சார்ஜ்!’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம்  #NowAtVikatan

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் விளக்கினார். தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளையும் முதல்வர் முன்வைத்து வருகிறார். இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு, பொது போக்குவரத்து தொடக்கம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

11 Aug 2020 11 AM

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,

``எடப்பாடியார் என்றும் முதல்வர்!

இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று அமைச்சர் செல்லூர் ராஜு, `தேர்தலை சந்தித்துவிட்டு எம்.எல் ஏ-க்கள் முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள்’ எனக் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.

11 Aug 2020 9 AM

இந்தியாவில் 23 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,68,676 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 871 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,257 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,83,490ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு