வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு! - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு #NowAtVikatan
11-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
வருமான வரி வழக்கில் கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு!

ரூ.7.37 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என கார்த்தி சிதம்பரம் எம்.பி மீது வருமான வரித்துறையால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்தநிலையில் இன்று வருமான வரி வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும் முன்னர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவரும் தற்போது இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
நலமாக இருக்கிறேன்!- ஸ்டாலின்
தனக்கு லேசான மயக்கம், உடல் சோர்வு இருந்ததாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார்.

கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிவந்த நிலையில், ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், ஸ்டாலின் இது குறித்து விளக்கமளித்திருக்கிறார். கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``எனக்கு லேசான மயக்கம், உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி பி.பி., ஈ.சி.ஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றபடி ஏதுமில்லை. சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்று ஸ்டாலின் தெரிவித்தார்.