Published:Updated:

ஆந்திரா: 45 நிமிடங்கள் கால தாமதமாக வந்த ஆக்ஸிஜன் - 11 கொரோனா நோயாளிகள் துடிதுடித்து உயிரிழப்பு!

திருப்பதி அரசு மருத்துவமனை
திருப்பதி அரசு மருத்துவமனை

தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கு சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனதால் 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறல் அதிகரித்து மருத்துவமனை படுக்கைகளிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பெரும்பாலான மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலால் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. அதன் காரணமாக இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், உயிர் காக்கும் ஆக்ஸிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவையைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் தேசம் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது.

கொரோனா பரவல் மிகுதியாக உள்ள தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை சமீபமாகப் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கடந்த வாரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள், அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரே நேரத்தில் 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

ஆந்திர மாநிலம், திருப்பதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைப் பிரிவில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஐந்து தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மொத்தம் 150 நோயாளிகள் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில், நேற்றிரவு (திங்கள்கிழமை) சுமார் 7:30 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனதால் மூச்சுத்திணறித் துடித்துள்ளனர். சுமார் 45 நிமிடங்களுக்கும்  மேலாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனதால் 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறல் அதிகரித்து மருத்துவமனை படுக்கைகளிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சக நோயாளிகள் துடிதுடித்து உயிரிழந்ததைக் கண்ட நோயாளிகள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர்.

ஆக்ஸிஜன் பிரச்னையை சமாளிக்க உதவும் லிங்க முத்திரை... செய்வது எப்படி? - நிபுணர்கள் வழிகாட்டல்

இதற்கிடையில், தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் ஆக்ஸிஜன் திரவத்தை அவசரகதியில் நிரப்பி வென்டிலேட்டர்களை மீண்டும் இயங்கவைத்தனர். வென்டிலேட்டர் இயங்கத் தொடங்கியவுடன் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த நோயாளிகள் பலர் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பினர். சென்னையிலிருந்து ஆக்ஸிஜன் திரவம் ஏற்றிக்கொண்டு ஆந்திராவுக்குச் சென்ற டேங்கர் லாரி திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சுமார் இரண்டு மணி நேரம் கால தாமதமாக வந்தடைந்ததால்தான் மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 11 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் ஆய்வு செய்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர், ``மருத்துவமனையில் துரதிர்ஷ்டவசமாக 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். இருப்பினும், மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் மருத்துவமனையில் பணியிலிருந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம்" என்றார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை
Representational Image

இந்தநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் 11 கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு