Published:Updated:

இன்று புகழேந்தி... அன்று முருகேசன்! - “பதுங்கு குழி வாழ்க்கை மாதிரி ஆகிடுச்சு எங்க நிலைமை...”

புகழேந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
புகழேந்தி

போலீஸ்காரங்க பயிற்சிக்கு வந்துட்டாங்கன்னு தெரிஞ்சாலே எங்க நடமாட்டத்தைக் குறைச்சுக்குவோம்.

‘‘நேத்து இன்னைக்கு இல்லை... நாப்பது வருஷமா உயிர் பயத்துலயே வாழுறோம். ஒவ்வொரு முறையும் துப்பாக்கிச் சத்தம் கேட்குறப்பல்லாம், எப்ப எங்க மேல குண்டு பாய்ஞ்சிடுமோன்னு உசுரைக் கையில பிடிச்சுக்கிட்டு ஓடி ஒளியுறோம். பதுங்கு குழி வாழ்க்கை மாதிரியாகிப் போயிடுச்சு எங்க நிலைமை...” - யுத்தபூமியில் எழுந்திருக்கும் அவலக்குரல் அல்ல இது. புதுக்கோட்டை மாவட்டத்தின் நார்த்தாமலை சுற்றுவட்டார கிராம மக்கள் மரண பீதியோடு வெளிப்படுத்திய வார்த்தைகள் இவை!

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் தமிழக காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சிதளம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் இந்த மையத்தில் தமிழக போலீஸார் மட்டுமின்றி, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த டிசம்பர் 30 அன்று இங்கிருந்து வெளியேறிய தோட்டா, ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் நார்த்தாமலை - கொல்லம்பாறை இறக்கத்தில் வீட்டு வாசலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவனின் தலையில் பாய... ரத்த வெள்ளத்தில் அப்படியே மூர்ச்சையாகிச் சரிந்தான் அவன். என்ன... ஏதென்று புரியாமல் அவனது பெற்றோர் சிறுவனை அள்ளிக்கொண்டு அலறியடித்தபடியே புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்கள். தோட்டா மூளைக்கு வெகு அருகில் பாய்ந்திருந்ததால், அங்கிருந்து உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சிறுவனை அனுப்பினார்கள். அங்கு நான்கு மணி நேரம் டாக்டர்கள் போராடி தோட்டாவை அகற்றினார்கள். ஐந்து நாள்கள் மரணத்தோடு போராடிய சிறுவன், ஜனவரி 3-ம் தேதி இறந்துபோக... மொத்த ஊரும் கொந்தளித்துப்போனது. தொடர்ந்து துப்பாக்கி சுடும் தளத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள் ஊர் மக்கள்.

புகழேந்தி
புகழேந்தி

நார்த்தாமலை பகுதிக்குச் சென்றபோது ஊரே துக்கத்தின் பிடியிலிருந்தது. அங்கிருந்த மக்களிடம் பேசினோம்... ‘‘போலீஸ்காரங்க பயிற்சிக்கு வந்துட்டாங்கன்னு தெரிஞ்சாலே எங்க நடமாட்டத்தைக் குறைச்சுக்குவோம். அப்படியே கடை கண்ணிக்கு போகணும்னாலும், உசுரைக் கையில புடிச்சிக்கிட்டுத்தான் போவோம். ஒவ்வொரு தடவை அவங்க சுடும்போதும் ஒண்ணு, ரெண்டு குண்டுங்க எங்க குடியிருப்புக்குள்ள வந்து விழுந்துடும். பலமுறை எங்க கண்ணு முன்னாடியே பக்கத்துல வந்து தோட்டா பாய்ஞ்சிருக்கு. ‘ஆத்தாடி’ன்னு பதறியடிச்சுக்கிட்டு வீட்டுக்குள்ள ஓடியாந்துடுவோம். இங்க ஃபயரிங் நடத்தக் கூடாதுன்னு பலமுறை போராட்டம் நடத்தியிருக்கோம். அதனால, நடுவுல ரெண்டு முறை நிறுத்திட்டாங்க. கடைசியா அஞ்சு வருஷத்துக்கு முன்னால, தற்காலிகத் தடை போட்டாங்க. ஆனா, திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்க. இந்த அப்பாவிக் குழந்தையோட உசுரு போனதுக்கு அப்புறமாவது இந்தப் பயிற்சி முகாமை நிரந்தரமா மூடணும்” என்றார்கள் கண்ணீருடன்.

இன்று புகழேந்தி... அன்று முருகேசன்! - “பதுங்கு குழி வாழ்க்கை மாதிரி ஆகிடுச்சு எங்க நிலைமை...”

சிறுவனின் குடும்பம் அருகிலுள்ள கொத்தமங்கலப்பட்டியில் வசித்துவந்தது. அரையாண்டு விடுமுறையில் தன் தாத்தா வீட்டுக்கு வந்த இடத்தில் அநியாயமாகப் பறிபோயிருக்கிறது சிறுவனின் உயிர். புகழேந்தியின் தாய் பழனியம்மாள் நெஞ்சில் அடித்துக் கதறிக்கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பேச்சுக் கொடுத்தோம்... “அம்மா பசிக்குதுன்னு அவனே சோறு எடுத்துப்போட்டு அப்பதான் ஒரு வாய் சாப்பிட்டான். அதை முழுங்கக்கூட இல்லை... திடீர்னு குழந்தை பேச்சு மூச்சில்லாம விழுந்துட்டான். தலையிலிருந்து ரத்தம் பொலபொலனு ஊத்துறதைப் பார்த்து எனக்குக் கையும் ஓடலை... காலும் ஓடலை. கட்டியிருந்த சேலையைக் கிழிச்சு ரத்தம் வர்ற இடத்துல அமுக்கிப் பார்த்தேன். அக்கம் பக்கத்துல இருந்தவங்களோட அவனைத் தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். யாருக்குய்யா பாவம் செஞ்சான் எம்புள்ள... இப்பிடி கொன்னுப்புட்டாங்களே...” என்று கதறினார்.

இன்று புகழேந்தி... அன்று முருகேசன்! - “பதுங்கு குழி வாழ்க்கை மாதிரி ஆகிடுச்சு எங்க நிலைமை...”

தற்போது சிறுவன் புகழேந்தியின் உயிரைப் பறித்த தோட்டா, 20 வருடங்களுக்கு முன்னர் 2001-ல் முருகேசனின் மார்பில் பாய்ந்திருக்கிறது. நல்லவேளையாக பிழைத்துக் கொண்டார் அவர். ரண வேதனையை அனுபவித்த முருகேசனுக்கு, 21 நாள்கள் கழித்துத்தான் முதுகுப் பகுதி வழியாகத் தோட்டா அகற்றப்பட்டது. தற்போது அன்னவாசல் ஊராட்சிச் செயலாளராக இருக்கும் முருகேசனிடம் பேசினோம்... ‘‘அன்னைக்கு காலையில 10 மணி இருக்கும். ஊரப்பட்டி கிராம கூட்டுறவு அங்காடி கட்டுறதுக்கு கான்கிரீட் போட்டுக்கிட்டு இருந்தோம். திடீர்னு, என் நெஞ்சுல கிரிக்கெட் பேட்டால ஓங்கி அடிச்ச மாதிரி இருந்துச்சு. ரத்தம் குபுகுபுன்னு வந்துச்சு. மயக்கம்போட்டு விழுந்துட்டேன்.

இன்று புகழேந்தி... அன்று முருகேசன்! - “பதுங்கு குழி வாழ்க்கை மாதிரி ஆகிடுச்சு எங்க நிலைமை...”

தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில நைட்டு எட்டு மணிக்குத்தான் கண்ணு முழிச்சேன். உடம்பை அசைக்கக்கூட முடியலை... நிமிஷத்துக்கொரு தடவை நெஞ்சுல ஈட்டி பாய்ஞ்ச மாதிரி வலிச்சது. 20 நாள் மரண வேதனையை அனுபவிச்சேன். அதுக்கப்புறம் தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்தான், முதுகுத்தண்டுவடத்துக்குப் பக்கத்துல சிக்கிக்கிட்டிருந்த தோட்டாவை எடுத்தாங்க. அதுக்குப் பிறகும் ரெண்டு மாசம் சிகிச்சையில இருந்தேன். அப்பவே 90 ஆயிரம் ரூவா செலவாச்சு. ஆறு மாசம் நடக்கவே சிரமப்பட்டேன். எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நியாயமும் நிவாரணமும் கேட்டு கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீஸ்னு ஏறி இறங்கி மனு கொடுத்ததுல அலைச்சல்தான் மிச்சம். அரசு தரப்புல இருந்து ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரலை. அப்புறம்தான் கோர்ட்டுக்குப் போனேன். 20 வருஷமா வழக்கு நடந்துக்கிட்டு இருக்கு... எந்த ஊருலயாவது இப்படியொரு அநீதி நடக்குமா!” என்றபோது அவரது கண்கள் கலங்கிவிட்டன!

தற்போது இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில், ‘‘நாங்கள் சுடவில்லை’’ என்று போலீஸ் தரப்பு மறுக்கிறது. ஆரம்பத்தில் வீட்டுக்கு அருகில் விபத்து நடந்ததையே மறைக்கும் முயற்சிகள் நடந்ததாகச் சொல்கிறார்கள் மக்கள். ‘‘விபத்து நடந்த பிறகு வீட்டுக்கு வந்த போலீஸார், தரையில சிந்திக்கிடந்த ரத்தத்தை அவசர அவசரமா துடைச்சு எடுத்தாங்க. துப்பாக்கி சுடுற இடத்துல குண்டு பொறுக்கப் போனப்பதான் புகழேந்தி அடிபட்டான்னு செட்டப் பண்ணப் பார்த்தாங்க. அது முடியாததால, ‘நாங்க சுட்ட குண்டு பையன் மேல பாயலை’ன்னு இப்போ சாதிக்குறாங்க’’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

முருகேசன்
முருகேசன்

இதற்கிடையே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு. சி.ஐ.எஸ்.எஃப் மற்றும் தமிழகக் காவல்துறை மீது கீரனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக் கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்திய இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுத பாணியிடம் பேசினோம்... ‘‘டிசம்பர் 30-ம் தேதி காலை சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் 34 பேரும், திருச்சி சரக போலீஸார் 18 பேரும் பயிற்சியில் ஈடுபட்டிருக்காங்க. சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பயிற்சிக்கான அனுமதிக் கடிதத்தை என்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. ஆனா, தமிழக போலீஸ் ஒப்படைக்கலை. ரெண்டு தரப்புமே எங்க தோட்டா சிறுவனைத் தாக்கலைன்னு சொல்றாங்க. சிறுவனோட தலையில இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாவை ஆய்வுக்கு அனுப்பியிருக்கோம். முடிவு வந்த பிறகுதான் யார் மேல தப்புன்னு தெரியும்’’ என்றார் சீரியஸாக.

பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததும், போலீஸாரின் அலட்சியமுமே இது போன்ற அசம்பாவிதங்களுக்குக் காரணம். சிறுவனின் அநியாய மரணத்துக்கு நியாயம் தேடித் தருவதுடன், துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை மக்களுக்கு ஆபத்தில்லாத வகையில் அமைப்பதும் மிக மிக அவசியம்!