அரசியல்
அலசல்
Published:Updated:

ஒரே ஆண்டில் 117 விபத்துகள்... பாதுகாப்பற்றதா பாம்பன் பாலம்?

பாம்பன் பாலம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாம்பன் பாலம்

சமூக ஆர்வலர் திருமுருகன், ‘‘பாம்பன் பாலத்தில் 60 சதவிகித விபத்துகள் அரசுப் பேருந்துகளால் மட்டுமே நிகழ்கின்றன.

பாம்பன் கடல் பாலத்தில், நடப்பாண்டில் இதுவரை 117 விபத்துகள் நடந்திருப்பதால் அதிர்ந்துபோயிருக்கிறார்கள் ராமேஸ்வரம் தீவு மக்கள்!

கடந்த 12-ம் தேதியன்று பாம்பன் பாலத்தில் அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆம்னி பேருந்து கடலுக்குள் விழும் பேரபாயம் நூலிழையில் தடுக்கப்பட்டது. இந்த அதிர்விலிருந்து மீள்வதற்குள் அதே பாம்பன் பாலத்தில், கடந்த 20-ம் தேதி அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 20 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

ஒரே ஆண்டில் 117 விபத்துகள்... பாதுகாப்பற்றதா பாம்பன் பாலம்?

தொடர்கதையாகிவரும் விபத்துகள் குறித்து நம்மிடம் பேசிய பாம்பன் மீனவர் சின்னத்தம்பி, ‘‘கடந்த 2017-ம் ஆண்டு, பாம்பன் பாலத்தில் நூறாவது விபத்து நடந்தபோது அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாம்பன் பாலத்திலேயே கேக் வெட்டி, நூதன போராட்டம் நடத்தினோம். உடனே பாலத்தின் இரு ஏற்றங்களிலும் வேகத்தடைகள் அமைத்தார்கள். சுற்றுலாப்பயணிகள் பலர் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டே வாகனத்தை இயக்குவதால், பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது பாம்பன் பாலம். எனவே, பாலத்தின் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளி யிலும் வேகத்தடைகள் அமைத்தால் மட்டுமே, விபத்துகளைத் தடுக்க முடியும்’’ என்றார்.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

சமூக ஆர்வலர் திருமுருகன், ‘‘பாம்பன் பாலத்தில் 60 சதவிகித விபத்துகள் அரசுப் பேருந்துகளால் மட்டுமே நிகழ்கின்றன. தினமும் பலமுறை கடப்பதால், எந்தவித அச்சமும் இன்றி பாலத்தில் அதிவேகமாகப் பேருந்தை இயக்குகின்றனர். எனவே, ராமேஸ்வரம் வழித்தடப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் ‘பாலத்தில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்’ என 300 மீட்டருக்கு முன்பாகவே எல்.இ.டி திரை மூலம் எச்சரிக்கை செய்வதோடு, செக் போஸ்ட் அமைத்து வாகனங்களைக் கண்காணித்து அனுப்ப வேண்டும்’’ என்றார்.

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சரத்திடம் பேசியபோது, ‘‘தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கக் கூடாது என்பது விதி. வேகத்தடை மீது பேருந்துகள் ஏறி இறங்கும்போது அதனால் ஏற்படும் அதிர்வு, பாலத்துக்குப் பாதகமாகிவிடும். 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் பாலத்தைக் கடக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டும், 100 கிலோமீட்டர் வேகத்தில்தான் பாலத்தைக் கடக்கின்றனர். எனவே, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அமைத்து போலீஸார்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

திருமுருகன்
திருமுருகன்

இது தொடர்பாக விளக்கம் கேட்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையைத் தொடர்பு கொண் டோம். ஆனால், நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து பாம்பன் போலீஸாரிடம் பேசியபோது, ‘‘ராமேஸ் வரம் கோயிலுக்கு வரும் வி.ஐ.பி-களுக்கு பந்தோபஸ்து பணிக் குச் செல்வதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. விதிகளை மீறும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானோர் வி.ஐ.பி., வி.வி.ஐ.பி-யாக இருப்பதால், அவர்களைக் கண்டிக்க வும் முடியவில்லை’’ என்றனர் இயலாமையுடன்.

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்தப் பொறுப்பை மட்டும் தட்டிக்கழிப்பது ஏனோ?!