Published:Updated:

ஆதரவு 125; எதிர்ப்பு 105 - குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்! #NowAtVikatan

11-12-2019 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

மாநிலங்களவை
மாநிலங்களவை
11 Dec 2019 9 PM

குடியுரிமை மசோதா நிறைவேற்றம்!

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்தப்பின் சட்டமாக நிறைவேற்றப்படும். முன்னதாக வாக்கெடுப்பின்போது சிவசேனா வெளிநடப்பு செய்தது.

11 Dec 2019 8 PM

240 ரன்கள் குவித்த இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 91 ரன்களும், ரோஹித் ஷர்மா 71 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோலி, 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலையில் இருக்கும்நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, தொடரையும் வெல்லும்.

11 Dec 2019 7 PM

3வது டி20 - இந்தியா பேட்டிங்!

ஆதரவு 125; எதிர்ப்பு 105 - குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்! #NowAtVikatan

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 3வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜடேஜாவுக்குப் பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சஹாலுக்குப் பதிலாக குல்தீப் இடம்பிடித்துள்ளார்.

11 Dec 2019 6 PM

மேயர் பதவி இடஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு!

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

தமிழகத்தில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோவை, நாகர்கோவில், ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பெண் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

11 Dec 2019 5 PM

பட்டம் பெற்றார் மானி பேக்கியோ!

மானி பேக்கியோ
மானி பேக்கியோ

பிரபல குத்துச் சண்டை வீரரும், பிலிப்பைன்ஸ் செனட்டருமான மானி பேக்கியோ தனது 40வது வயதில் மாகதி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் பட்டம் பெறுவது இதுதான் முதல் முறை. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலேஜ் ஐடி கார்டு உடன் பகிர்ந்துள்ள மானி ``வாழ்க்கையை ஒருபோதும் கற்பிப்பதை நிறுத்தாது. அதனால் கற்றலை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

11 Dec 2019 5 PM

நாளை விசாரணை!

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறையில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

11 Dec 2019 3 PM

10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்த PSLV

ஆதரவு 125; எதிர்ப்பு 105 - குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்! #NowAtVikatan

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்சி சி 48 ராக்கெட். விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் பிஎஸ்எல்சி வரிசையில் 50வது ராக்கெட்டாகும். இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் RISAT-2BR1 செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.

11 Dec 2019 2 PM

ஆதாரம் இல்லை!

குஜராத் மாநிலத்தில் 2002 -ம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நானாவதி கமிஷன், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி மற்றும் மற்ற அமைச்சர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதற்கான ஆதரங்கள் இல்லை என தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.

இன்று குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த 1500 பக்க அறிக்கையில், `கலவரத்தின் போது நடைபெற்ற தாக்குதலில் அப்போது முதல்வராக இருந்த மோடிக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்வதற்கு எந்த ஆதரமும் இல்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

11 Dec 2019 1 PM

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை இல்லை!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க தரப்பில், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறப்பட்டது. அதற்கு அரசு தரப்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொய் என வாதாடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் திட்டமிட்டப்படி தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

11 Dec 2019 11 AM

இதயங்களை வென்றுவிட்டீர்கள்!

மான்சி சூப்பர் லீக் என்னும் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பரபரப்பான சேஸிங் போட்டியில் இலங்கை அணியில் பந்து வீச்சாளர் ஒருவரின் செயல் அனைவராலும் பாராட்டும்படியாக அமைந்துள்ளது.

இலங்கையின் இஸுரு உடானா என்பவர் பந்துவீசுகிறார். பேட்டிங் செய்யும் நெல்சன் மண்டேலா பே ஜெயின்ஸ் அணிக்கு 8 பந்துகளில் 24 ரன்கள் தேவை. பேட்ஸ்மேன் பலமாக அடித்த பந்து எதிர் திரையில் இருந்த பேட்ஸ்மேனை தாக்கி பந்து வீச்சாளர் அருகே பந்து விழுகிறது. பந்தை கையில் எடுத்து ரன் அவுட் செய்யும் வாய்ப்பு உடானாவுக்கு கிடைக்கிறது. வலியால் துடித்த வீரரை ரன் அவுட் செய்யாமல் அடுத்த பந்தை வீசச் செல்கிறார் உடானா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகப் பரவி வருகிறது. இதுதான் ஜென்டில்மேன் கேமின் அழகு என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

11 Dec 2019 12 PM

`தீப்பந்த வெளிச்சம்; டோலி கட்டி தூக்கிச்செல்லப்பட்ட சடலம்!’- அதிர்ச்சியில் உறங்காத நெக்னாமலை கிராமம் #Tirupattur

`தீப்பந்த வெளிச்சம்; டோலி கட்டி தூக்கிச்செல்லப்பட்ட சடலம்!’- அதிர்ச்சியில் உறங்காத நெக்னாமலை கிராமம் #Tirupattur மேலும் விவரங்களுக்கு https://www.vikatan.com/news/tamilnadu/mountain-village-in-thiruppaththur-faces-trouble

11 Dec 2019 10 AM

தி.மு.க மனு மீது இன்று விசாரணை! 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி வேட்புமனுக்களும் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி தி.மு.க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

11 Dec 2019 8 AM

பாரதி பிறந்தநாள்- மோடியின் தமிழ் ட்வீட்! 

பாரதியார்
பாரதியார்

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். `தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

11 Dec 2019 8 AM

வைரலாகும் ரஹ்மான் படங்கள்!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் நேற்று தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் செம வரைல். இந்தப் புகைப்படங்கள் நாகாலாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. நாகாலாந்தில் கலாசார திருவிழா மிகவும் பிரபலம். `ஹார்ன்பில் திருவிழா' என்று அழைக்கப்படும் இந்த விழா 10 நாள்கள் நடைபெறும். இதில் கலை, இசை, கலாசாரம் போன்ற பல விஷயங்கள் இடம்பெறும்.

ரஹ்மான்
ரஹ்மான்

இந்த ஆண்டு நடைபெற்ற இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 2.5 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் இறுதிநாளில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முன்னதாக அவர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கும் சென்றார்.

ரஹ்மான்
ரஹ்மான்

அங்குள்ள குழந்தைகள், அவருக்காக பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தினர். பதிலுக்கு ரஹ்மானும் அவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அளித்தார். அந்த இல்லத்திலிருந்து சுமார் 20 குழந்தைகளை ரஹ்மானின் `சன்ஷைன் ஆர்கஸ்ட்ரா’ மூலம் இசை கற்க தேர்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார். சன்ஷைன் ஆர்கஸ்ட்ரா என்பது ஏழைக் குழந்தைகள் இசை கற்பதற்காக ரஹ்மானால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.