Published:Updated:

தொடர் கனமழை; வெள்ள அபாய எச்சரிக்கை! - நெல்லைக்கு விரைந்த தேசியப் பேரிடர் மீட்புப் படை #NowAtVikatan

தாமிரபரணி ஆறு
தாமிரபரணி ஆறு ( மாதிரிப் படம் )

12-01-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Jan 2021 5 PM

நெல்லைக்கு விரைந்த தேசியப் பேரிடர் மீட்புப் படை!

தாமிரபரணி
தாமிரபரணி

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளிலிருந்து வெளியேறும் உபரிநீர், தாமிரபரணி ஆற்றில் 40,000 கனஅடி திறந்துவிடப்பட்டிருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அரக்கோணத்திலிருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 50 பேர் அடங்கிய இரு குழுக்கள் நெல்லைக்கு வந்துகொண்டிருக்கின்றன.

- ஆண்டனிராஜ்

12 Jan 2021 1 PM

மின்கம்பி மீது உரசிய பேருந்து! - 5 பேர் பலி

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூர் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பியில் உரசியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்திருக்கிறது.

இந்த விபத்தில் பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

12 Jan 2021 10 AM

தமிழகம் வந்தது கொரோனா தடுப்பூசி!

புனேவிலிருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது. மத்திய தொகுப்பிலிருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி
தடுப்பூசி

முன்னதாக சீரம் நிறுவனத்தின் 5.36 லட்சம் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகள் முதற்கட்டமாக தமிழகம் வரும் என சுகாதாரத் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். `மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

12 Jan 2021 9 AM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு வரும் ராகுல் காந்தி?!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14-ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ல் பாலமேட்டிலும், 16-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த ஏற்கெனவே தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளின் கவனமும் தேர்தல் பரப்புரை பக்கம் திரும்பியிருக்கிறது.

அவனியாபுரம்
அவனியாபுரம்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தநிலையில் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 14-ம் தேதி அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

- ஆர்.பி

அடுத்த கட்டுரைக்கு