Published:Updated:

கொரோனோவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு! - உறுதிப்படுத்திய கர்நாடக அமைச்சர் #Corona #NowAtVikatan

கொரோனா
கொரோனா

12-03-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

12 Mar 2020 11 PM

கொரோனோவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடகாவில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 76 வயது முதியவரின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் இருந்து ஹைதராபாத்துக்குக் கடந்த பிப்ரவரி 29ம் தேதி வந்த அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது, கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`86,174 பேர்; ஒருவருக்கு கொரோனா தொற்று!’- எச்சரிக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப்  #T20WorldCup

அதன்பின்னர் வீட்டுக்கு வந்த அவர், கடந்த 5ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் . பின்னர் மூன்று நாள்களுக்குப் பின்னர் அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டிருக்கிறார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை அந்த மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். வீடு திரும்பியவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார். கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் என்ன காரணத்துக்காக மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பது தெரியவில்லை என்கிறார்கள். கர்நாடகா சுகாதாரத் துறை அமைச்சர் பி.ஸ்ரீமுலு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

12 Mar 2020 9 PM

`பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!' -

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளும் காலிமைதானத்தில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளின் போது மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், போட்டியை கட்டாயம் நடத்தி ஆக வேண்டும் என்றால், ரசிகர்கள் இல்லாமல் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து போட்டியை காலி மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 Mar 2020 5 PM

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் கிரிக்கெட்?

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி மும்பையில் தொடங்குகின்றன. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களை பார்வையாளர் இன்றி நடத்துமாறு ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பார்வையாளர்கள் இன்றி போட்டியை நடத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு கொரோனா பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

12 Mar 2020 3 PM

’பங்குச்சந்தையில் 12 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி’

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு தொடர்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் குறைந்து 32,778 -ல் வணிகம் நிறைவு.தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 868 புள்ளிகள் சரிந்து 9,590 புள்ளியில் வர்த்தகம் நிறைவு. 2008-ம் ஆண்டுக்கு பின் பங்குச்சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட தொடர் சரிவால் ஒரேநாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11.42 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

12 Mar 2020 12 PM

நடிகர் விஜய் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் ஆய்வு! 

பிகில் பட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இந்த நிலையில் தற்போது ஐ.டி அதிகாரிகள் பனையூர் வீட்டில் மீண்டும் ஆய்வு செய்கிறார்கள். ஏற்கனவே கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

12 Mar 2020 9 AM

ஐ.பி.எல் தொடரின் நிலை என்ன?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை. உலகம் முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து விமானங்கள் வர 30 நாள்களுக்குத் தடை விதித்துள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அமெரிக்காவின் பிரபல என்.பி.ஏ கூடைப்பந்து விளையாட்டின் நடப்பு சீசன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாடும் வீரர் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மார்ச் 21 -ம் தேதி தொடங்க இருந்த ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் ஏலம்
ஐ.பி.எல் ஏலம்

இன்று தரம்சலாவில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இன்றைய போட்டிக்கு 16,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் கேள்வி, ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா என்பதுதான். வரும் 14 -தேதி பிசிசிஐ யின் முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவது, ஒத்திவைப்பது அல்லது நிறுத்திவைப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு