Election bannerElection banner
Published:Updated:

`தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது!’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

12-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Apr 2021 5 PM

`தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்!’ - முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர், ``அரசு அலுவலக ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்கு அருகேயுள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தொழிற்சாலைகள், உணவகங்கள், மார்க்கெட் பகுதியிலுள்ள நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அரசு அதற்குத் தயாராக இருக்கிறது. அந்தந்தத் தொழிற்சாலையைச் சேர்ந்த நிறுவனம் அரசு மருத்துவமனையை அணுகினால் அங்கேயே வந்து தடுப்பூசி செலுத்தத் தயாராக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது உரையில் பேசியிருந்தார்.

12 Apr 2021 3 PM

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிவேகமாகப் பரவிவருகிறது. பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தநிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள மூன்றாவது தடுப்பூசி ஸ்புட்னிக்!

12 Apr 2021 9 AM

உச்ச நீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு..!

உச்ச நீதிமன்றம் 
உச்ச நீதிமன்றம் 

டெல்லியில், உச்ச நீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உச்ச நீதிமன்ற ஊழியர்களில் 50 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிப்பு எனவும், உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் நேரிடையாக முறையிடும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு எனவும், காணொலி வாயிலாக முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, இன்று வழக்குகளை காணொலி மூலம் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

12 Apr 2021 9 AM

புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,35,27,717 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதன் மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொரோனா
கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 904. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,70,179 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 12,01,009 பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு