Published:Updated:

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா.. சென்னையில் இன்றும் 500ஐ தொட்ட பாதிப்பு! #NowAtVikatan

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

12.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 May 2020 9 PM

மாணவர் அறக்கட்டளையினரால் கொண்டாடப்பட்ட செவிலியர்கள்!

சர்வதேச செவிலியர் தினம்.உறுதி மொழி ஏற்ற செவிலியர்கள்
சர்வதேச செவிலியர் தினம்.உறுதி மொழி ஏற்ற செவிலியர்கள்
உ.பாண்டி

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நடத்தி வரும் 'விழுதுகள் அறக்கட்டளை' சார்பில் உலக செவிலியர் தினம் ராமேஸ்வரத்தில் சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த உலக செவிலியர் தின விழாவிற்கு ராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல்ஜபார் தலைமை வகித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். மருத்துவ அதிகாரி மீனாகுமாரி வரவேற்றார். 25-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முன்னிலையில் மூத்த செவிலியர் கருப்பாயி கேக் வெட்டி செவிலியர் தினத்தை சிறப்பித்தார்.

12 May 2020 7 PM

சென்னையில் இன்றும் 500ஐ தொட்ட பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 -ஆக உயர்ந்துள்ளது. நேற்றைவிட பாதிப்பு இன்று குறைவு என்றாலும் 700ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 510 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4882 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 6000க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ளது.

12 May 2020 6 PM

2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை!

பிரதமர் உடனான நேற்றைய கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில், மருத்துவ உபகரணங்களுக்கான சிறப்பு நிதியாக ரூ. 2,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பதால், வரும் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டாம் என தமிழகத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை அடுத்து தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னைக்கு வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

12 May 2020 5 PM

உயர்மட்டக்குழுவில் விவசாய பிரதிநிதிகளைச் சேர்க்கணும்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடு செய்யவும், வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரெங்கராஜன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலருக்கு அக்குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயிகளுக்கும் இடமளிக்க வேண்டுமென அரசுக்கு பி.ஆர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12 May 2020 1 PM

திருமழிசையில் பயன்பாட்டுக்கு வந்த தற்காலிக காய்கறி சந்தை!

கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதால் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை பயன்பாட்டுக்கு வந்தது இடம்:திருமழிசை வீடியோ:பா.காளிமுத்து

Posted by Vikatan EMagazine on Monday, May 11, 2020
12 May 2020 1 PM

போலீஸாரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் நடிகர் சூரி. இடம்:திருவல்லிக்கேணி, சென்னை வீடியோ: ஸ்ரீனிவாசுலு

Posted by Vikatan EMagazine on Monday, May 11, 2020

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரை நடிகர் சூரி நேரில் பாராட்டினார். திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்குச் சென்று காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த அவர், போலீஸாரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

12 May 2020 12 PM

இரவு 8 மணிக்கு மோடி உரை!

இந்தியாவில் வரும் 17 -ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி கலந்துரையாடிய நிலையில் இன்று ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

12 May 2020 10 AM

ஜூன் 1-ம் தேதி முதல் பொதுத்தேர்வு!

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். ``தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையில் நடைபெறும். ஒத்திவைக்கப்பட்ட ப்ளஸ் ஒன் தேர்வுகள் ஜூன் மாதம் 2-ம் தேதி தொடங்கி நடைபெறும். பேருந்து வசதி இல்லாத காரணத்தால் ப்ளஸ் டூ தேர்வை எழுத முடியாமல் போன சுமார் 36,000 மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4-ம் தேதி தேர்வுகள் நடைபெறும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``மாணவர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படும். பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

12 May 2020 10 AM

இந்தியாவில் 70,000-த்தைக் கடந்த பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று காலைவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் 70,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்கள் 2,293 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்ட்ரா முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 23,401 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 22,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

12 May 2020 1 PM

ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த மழை! 

ராமேஸ்வரத்தில் கொட்டும் மழை... நேரலை. உ.பாண்டி

Posted by Vikatan EMagazine on Monday, May 11, 2020
அடுத்த கட்டுரைக்கு