Published:Updated:

கொரோனா - நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு #NowAtVikatan

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

12-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 May 2021 6 PM

தமிழக அரசே தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும்

45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. ஆனால் 18 - 45 வயதுள்ளவர்களுக்கு மாநில அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதாகவும், தற்போது கொடுத்திருக்கும் தடுப்பூசிகள் தேவைக்கு மிகக் குறைவாகவே இருப்பதால் தமிழக அரசே தடுப்பூசிகளை, சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் இறக்குமதி செய்ய இருப்பதாகவும் அரசு அறிவித்திருக்கிறது.

12 May 2021 6 PM

அனைத்து சட்டமன்ற கட்சிகள் கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு. ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் தலா 2 பேர் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை வழங்க அழைப்பு விடுத்து கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாளை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

12 May 2021 2 PM

பிளஸ் 2 பொதுத் தேர்வு: `தள்ளிப்போகுமே தவிர ரத்து செய்யப்படாது!’

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``கொரோனா குறைந்த பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். பொதுத் தேர்வு தள்ளிப்போகுமே தவிர ரத்து செய்யப்படாது” என்றார்.

12 May 2021 10 AM

`சபாநாயகர்’ அப்பாவு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பதவியேற்றுக்கொண்டார். நேற்று சபாநாயகர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்த அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவரான துரைமுருகனும், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.

அப்பாவு
அப்பாவு

தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவராக கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியும் பதவியேற்றுக்கொண்டார்.

12 May 2021 10 AM

`மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை!’

கொரோனா இரண்டாவது அலையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்துக்காக மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும் கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 May 2021 10 AM

சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்!

சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி-யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாகவும் செயல்பட்ட ராகோத்தன், கொரோனா தொற்றால் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72 `ராஜீவ் காந்தி கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்ற கொலை வழக்கு தொடர்பன புத்தகமும் எழுதியிருக்கிறார்.

12 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,48,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,33,40,938 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,205. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,54,197-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,93,82,642 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,04,099 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,55,338 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 17,52,35,991 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு