சென்னை: மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்! #NowAtVikatan

12-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்!

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (செப்.12) மாலை காலமானார். நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு ஆகாஷ் என்கிற மகன் இருக்கிறார். சுதாங்கனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
1982-ம் ஆண்டு ‘ஜூனியர் விகடன்’ இதழில் நிருபராகச் சேர்ந்த, சுதாங்கன் அப்போது, புதுமையான ‘ரிப்போர்ட்டிங்’ முறைகளை அறிமுகப்படுத்தினார்.
நீட் தேர்வு அச்சம்: மாணவர் தற்கொலை!

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். நாளை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் ஆதித்யா உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இன்று காலை மதுரை மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட, நிலையில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளை தேர்வு எழுத இருந்த நிலையில் நாமக்கல் மாணவர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன். இவரின் மகன் மோதிலால், நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் நீட் தேர்வின் அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
ஏற்கனவே நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் மதுரை மாணவி ஜோதி துர்கா, தர்மபுரி மாணவன் ஆதித்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு மாணவரின் மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது.
5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4,97,066 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,307ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,517 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஜோதி துர்கா (19) என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ``மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி. ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.
அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை! - ஸ்டாலின் இரங்கல்
”நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி! நீட் மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மாணவி தற்கொலை: துணை முதல்வர் இரங்கல்!
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை!

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஜோதி துர்கா (19) என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு அச்சத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான கடிதமும் கிடைத்திருக்கிறது. போலீஸார் தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் மாணவியின் மரணத்துக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். துணை முதல்வர் பன்னீர் செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நீட் பயத்தலால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறும் அமைச்சர் உதயகுமார்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,59,985 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் ஒரே நாளில் 1,201 மரணங்கள் கொரோனா காரணமாக பதிவாகி உள்ளது. இதனால் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 77,472 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,24,197 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 9,58,316 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை!
தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்!