Published:Updated:

` ஊதியமும் குறைவு, பதவி உயர்வும் இல்லை!' - ஏர் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த 120 விமானிகள்

ஏர் இந்தியா விமான நிறுவன விமானிகள் 120 பேர் பணியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடனில் தத்தளித்து வருகிறது. ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பது தொடர்பாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. நிறுவனத்தின் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் குறைந்த ஊதியம் பெறுவதைக் காரணம் காட்டி பணியிலிருந்து விலகியதாக ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Air India
Air India

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகளுக்கு குறைந்த அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. பணியிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பிற விமான நிறுவனத்தில் வேலை எளிதாக கிடைக்கும் காரணங்களால், விமானிகள் பணியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனம் மிகக்குறைந்த அளவிலான ஊதியத்துக்கே விமானிகளை பணியில் அமர்த்தியுள்ளது.

அவர்களின் தற்போதைய சம்பள அமைப்பு மற்றும் சந்தை விகிதத்துக்கு இடையேயான வேறுபாடு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சரியான நேரத்துக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பணி உயர்வு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது மற்ற விமான நிறுவனங்களில் கோ பைலட் ஒருவர் கமாண்டராகப் பதவி உயர்வு பெற 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தில் பதவி உயர்வு பெற 5 ஆண்டுகள்வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பேசுகையில், `` சில விமானிகள் பணியிலிருந்து விலகியது உண்மைதான். அவர்களின் விலகலால் விமானத்தை இயக்குவதில் எந்தப் பாதிப்பு ஏற்படாது. ஏர் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், 2000-க்கும் அதிகமான விமானிகள் உள்ளனர்.

Pilot
Pilot

புதிய விமானிகள் 5 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பேரிலே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 250 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவத்துடன் தேர்வு செய்யப்படும் விமானிகள், 3,000 மணி நேரம் விமானத்தில் பறந்த பிறகு பணியிலிருந்து விலகுகிறார்கள். அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக நிறுவனம் நிறைய தொகையை செலவு செய்கிறது. அனுபவம் வாய்ந்த விமானியாக மாற்ற நிறைய தொகையை செலவு செய்கிறோம். ஆனால், அவர்கள் ராஜினமா செய்வது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.