Published:Updated:

``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்.." - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 15

``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்.." - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 15
``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்.." - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 15

``வழக்கைத் திரும்பப் பெற்றது ஏன்.." - மு.கருணாநிதி. காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 15

``காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தி.மு.க. அரசு வழக்கை திரும்பப் பெற்றதால்தான், இன்றுவரை அதற்குத் தீர்வு காண முடியாமல் இருக்கிறது” என்று அன்றுமுதல் இன்றுவரை அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் தி.மு.க. மீது பழி சுமத்தி வரும் வேளையில், இதுதொடர்பாகத் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையையும் நாம் சற்றே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

மு.கருணாநிதியின் அறிக்கை!

"காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக, தன் மீதும், தி.மு.க மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்து, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, கடந்த 2016- ம் ஆண்டு அக்டோபர் 26- ம் தேதி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``காவிரிப் பிரச்னையில் தி.மு.க. துரோகம் செய்துவிட்டது என்றும், உச்ச நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்ட வழக்கினைத் தி.மு.க. தன்னிச்சையாகத் திரும்பப் பெற்றதால், குடி முழுகிவிட்டது என்றும் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்ளாமல் திரும்பத்திரும்ப அறிக்கைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெறுப்பையும், விரோதத்தையும் சிலர் கக்கிவருகிறார்கள். அவர்களின் உண்மைக்குப் புறம்பான அந்தப் பேச்சுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், நடந்தது என்னவென்பதைப் புரியாதவர்களுக்கும், புரிந்தும் புரியாததைப்போல நடிப்பவர்களுக்கும் அழுத்தந்திருத்தமாகப் புரியவைக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கடமையின் அடிப்படையில் பின்வரும் விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

நான் பிறந்த வருடமான 1924-க்கும் காவிரிப் பிரச்னைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அப்போதுதான் மைசூரு ராஜ்ஜியமாக இருந்த கர்நாடக மாநிலத்துக்கும், சென்னை ராஜதானியாக இருந்த தமிழ்நாட்டுக்கும் காவிரி சம்பந்தமான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் வரக்கூடிய உபரிநீரை இரு மாநிலங்களும் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பது பற்றிக் கலந்துபேசி அதனை முறைப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையில் முடிவெடுப்பது என்றும், ஒருவேளை அதில் பிரச்னைகள் ஏற்படின், மத்திய அரசை நாடியோ, நடுவர் மன்றத் தீர்ப்பை நாடியோ உரிய முடிவெடுக்கக்கூடிய வழிவகை காண்பது பற்றித் தீர்மானித்திட 1974- ம் ஆண்டு ஆய்வு செய்யலாம் என்பதும்தான் 1924- ம் ஆண்டு ஒப்பந்தமாகும். 

இடைப்பட்ட 50 ஆண்டுக் காலத்தின் பெரும்பகுதி பிரச்னைகள் எதுவும் அதிகமின்றி நிலைமை இருந்ததற்கு மாறாக; 1974-க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924- ம் ஆண்டு ஒப்பந்தமே 1974- ம் ஆண்டு முடிந்துவிடுகிற ஒப்பந்தமென்று வாதிடத் தலைப்பட்டு; அதற்கு முன்னதாகவே 1924- ம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக 1968- ம் ஆண்டிலேயே ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர். அப்போது அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த தி.மு.க அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன்; மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது. மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி, 19-8-1968 அன்றும், 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரி தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு.கே.எல்.ராவ் முன்னிலை வகித்து நடத்தினார்.

கர்நாடக முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் பொதுப்பணித் துறையையும் கவனித்தார் என்ற முறையில் அதில் கலந்துகொண்டார். தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் நான், சட்ட அமைச்சர் மாதவனுடன் டெல்லி சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். முக்கியமாக 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்துவைக்கப்பட்டது; முடிவு எதுவும் தோன்றவில்லை. பின்னர், 1969-இல் அண்ணா மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9- ம் நாள், மீண்டும் கே.எல்.ராவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும், மகிழ்ச்சியடையக்கூடிய முடிவு எதுவும் ஏற்படவில்லை.

திரும்பத்திரும்ப நாம் வலியுறுத்தியதன் காரணமாக, 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாள்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும், அவை பலனளிக்கவில்லை. எனவே, 1971 ஜூலை 8- ம் நாள் காவிரிப் பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கழக அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 

தொடர்ந்து ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு ஆணை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், காவிரிப் பிரச்னையை நடுவர் மன்றத்துக்கு விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார்.

21-5-1972 அன்று தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி, ‘வழக்கு இல்லாமலே பேச்சுவார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம்’ என்று கூறினார்கள். அப்போது இந்திரா காந்தி அம்மையார், ‘இந்தப் பிரச்னையில் நான் பேசுவதென்றால், இடையில் நீங்கள் ஒரு வழக்குப் போட்டிருக்கிறீர்களே, இந்த வழக்கு இருக்கும்போது பேச முன்வருவார்களா? எனவே, என்னை நம்பி இந்த வழக்கைத் திரும்பப் பெறுங்கள்’ என்று கேட்டார்கள். அப்போதுகூட நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டிக் கலந்துபேசி, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து - அப்படித் திரும்பப் பெறுகின்ற நேரத்திலேகூட மீண்டும் வழக்குப்போட வழி வைத்துக் கொண்டுதான் அந்த வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறக் காரணம் இதுதான். ஜனநாயக அடிப்படையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட இந்த முடிவைத்தான் முன்பு அ.தி.மு.க-வினரும், தற்போது பி.ஜே.பி-யினரும் காவிரிப் பிரச்னையில் தி.மு.க-வும், நானும் துரோகம் செய்துவிட்டதாகத் திரும்பத்திரும்ப வேண்டுமென்றே அடிப்படைப் பிரச்னையைத் திசை திருப்பக்கூடிய வகையில் குறைகூறுகிறார்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார். 

இப்படி, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி விரிவான அறிக்கை வெளியிட்டும், அவர் மீதும் அவருடைய ஆட்சியின் மீதும் பலராலும் விமர்சனம் வைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு முறையும் காவிரிப் பிரச்னை தொடர்பாக விஸ்வரூபம் எடுக்கும்போதெல்லாம் தொடர்ந்து தி.மு.க. மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. 

காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு