Published:Updated:

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு! #NowAtVikatan

12-12-2019 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

பேரறிவாளன்
பேரறிவாளன்
12 Dec 2019 9 PM

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழக அரசு பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

12 Dec 2019 8 PM

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு?

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒருவார காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியதையடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில் அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

12 Dec 2019 4 PM

18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்காக அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய, இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் இன்று விசாரித்து, தள்ளுபடி செய்தனர்.

12 Dec 2019 1 PM

தெலங்கானா என்கவுன்டர் - உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவு!

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்
ANI

தெலங்கானாவில் பெண் டாக்டர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைப்பெற்றது. அப்போது, 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சுதந்திரமான முழு விசாரணை தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறியதுடன், நடந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமை உள்ளது என்றுகூறி என்கவுன்டர் தொடர்பாக நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டார்.

12 Dec 2019 12 PM

எகிப்து வெங்காயம் குறித்து செல்லூர் ராஜு!

`எகிப்து’ வெங்காயம்
`எகிப்து’ வெங்காயம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ``எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிமாக உள்ளதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்துக்கு நல்லது. எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வர் அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வாரம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்து விற்பனை செய்யப்படவுள்ளது.

12 Dec 2019 1 PM

பேரக் குழந்தைகளாய் கீரிப்பிள்ளைகளுக்குச் சோறூட்டிவிடும் முதியவர்!

12 Dec 2019 11 AM

தி.மு.க-வில் இருந்தும் வெளியேறினார் பழ.கருப்பையா!

முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தி.மு.க-வில் இருந்து விலகியுள்ளார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்னையில் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்திருந்த கருப்பையா தற்போது அங்கிருந்தும் விலகியுள்ளார். எனினும் அவர் விலகியதற்கு என்ன காரணம் என்பது சொல்லப்படவில்லை.

12 Dec 2019 10 AM

சிறார் வதை வீடியோ!

சிறார் வதை வீடியோக்களை சமூகவலைதளங்களில் கடந்த 2 ஆண்டுகளாக பகிர்ந்ததாக திருச்சி காஜாபேட் தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்ஸோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபரிடம் தொடர்ந்து தனிப்படையைச் சேர்ந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 Dec 2019 9 AM

அ.தி.மு.க-வுக்கு ஆதரவு - கருணாஸ்!

உள்ளாட்சித் தேர்தல் பணிகளில், கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளின் ஆதரவை பெறும் நோக்கில் கூட்டணி கணக்குகள் ஓடுகிறது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை பிரசாரம் மேற்கொள்ளும் என அதன் நிறுவனர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

12 Dec 2019 10 AM

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள்!

12 Dec 2019 8 AM

அஸ்ஸாமில் தொடர் போராட்டம்!

மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் அது மக்களவையில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து இந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஆனால், இந்த மசோதா பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளதாகவும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் எனவும் கூறி எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதல் இதற்கு எதிராக அஸ்ஸாமில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் போராடுவதால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்துவருகிறது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கையில் தீப்பந்தம் ஏந்தி இரவிலும் போராட்டம் தொடர்கிறது. கவுகாத்தியில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு! #NowAtVikatan

மேலும், போராட்டக்காரர்களை ஒடுக்க நேற்றிரவு ராணுவம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட அவர்கள் இன்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் 10 மாவட்டங்கள் இணையதள சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வட கிழக்குப் பகுதிகளில் போராட்டம் பரவும் என்பதால் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 5000 பாராமிலிட்டரி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.