Published:Updated:

ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா!- வெளியுறவு அமைச்சகம் தகவல் #NowAtVikatan

டைமண்ட் பிரின்சஸ் கப்பல்
டைமண்ட் பிரின்சஸ் கப்பல்

12.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

12 Feb 2020 8 PM

2 இந்தியர்களுக்கு கொரோனா!

கார்னீவல் ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்குப் பயணமானது. இந்தக் கப்பலில் பணியாளர்கள் உட்பட 3,700 நபர்கள் இருந்தனர். பிப்ரவரி 5-ம் தேதி ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் பயணித்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கப்பலானது யோகோமாகா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் 6 தமிழர்கள் உட்பட 138 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் சுற்றுலா பயணிகள், கப்பலில் வேலைப் பார்ப்பவர்கள் என இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இதற்கிடையே, 138 இந்தியர்களில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

12 Feb 2020 7 PM

தலைமைச் செயலாளருடன் தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு!

தலைமைச் செயலாளர் சண்முகத்தை தி.மு.க எம்.பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். தி.மு.க சட்டப்பேரவைச் செயலாளர் கிரிராஜன், வழக்கறிஞர் நீலகண்டன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். அப்போது தேர்வாணைய முறைகேடு தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் தி.மு.க புகார் மனுவை அளித்துள்ளது.

12 Feb 2020 1 PM

`போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...!’-

பிகில் பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. அதில், நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும் ஒரு தகவல் இருந்தது. அந்த பதிவுகள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ``போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார்.

12 Feb 2020 12 PM

புதுச்சேரி பேரவையில் சி.ஏ.ஏவுக்கு எதிராகத் தீர்மானம்

புதுச்சேரியில் 12-ம் தேதி கூடவிருக்கும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று கூடிய கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க, என்.ஆர். காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த நியமன உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

வெளிநடப்பு செய்த பாஜக எம்.எல்.ஏக்கள்
வெளிநடப்பு செய்த பாஜக எம்.எல்.ஏக்கள்

அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, “மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை ஏற்க மாட்டோம். அரசை டிஸ்மிஸ் செய்வது என்றால் செய்து கொள்ளுங்கள் என்று பிரதமரையும் அமித்ஷாவையும் கேட்டு கொள்கிறோம்.மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்” என்றார்.

- ஜெ.முருகன்

படம்: அ.குரூஸ்தனம்

12 Feb 2020 12 PM

அர்ச்சனா நேரில் ஆஜர்!

பிகில் திரைப்படத்தின் வசூலைக் குறைத்துக் காட்டியதாக எழுந்த வரி ஏய்ப்பு புகாரில் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகள், நடிகர் விஜய் வீடு, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் வீடுகள் போன்ற பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய், அன்புச்செழியன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

விஜய் - அர்ச்சனா
விஜய் - அர்ச்சனா

பின்னர் நடிகர் விஜய் தரப்பில் அவரது ஆடிட்டர் நேற்று ஆஜராகி விஜய் தரப்பு விளக்கத்தைக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று ஏ.ஜி.எஸ் நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அர்ச்சனா இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

12 Feb 2020 10 AM

‘மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!’- ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகிறார். டெல்லியில் புதிய அரசு வரும் 16-ம் தேதி பதவியேற்கிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது.

12 Feb 2020 8 AM

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கேவியட் மனு!

மாநிலங்களவை எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அமைச்சர் ஜெய்சங்கர்
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அமைச்சர் ஜெய்சங்கர்
Twitter

வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஜெய்சங்கர், கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து தற்போதைய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், அவர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க சார்பில் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வழக்கில் தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்ற நோக்கில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

`அண்டை நாட்டவருக்கு உதவ இந்தியா தயாராக இருந்தது!’ - கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஜெய்சங்கர்
அடுத்த கட்டுரைக்கு