Published:Updated:

பரோல் காலம் முடிந்தது - புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன் #NowAtVikatan

12.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

பேரறிவாளன்
பேரறிவாளன்
12 Jan 2020 1 PM

புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள பேரறிவாளன் அவரின் தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 12-ம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்தார். பரோல் முடிந்து டிசம்பர் 13-ம் தேதி சிறைக்குச் செல்லவிருந்த நிலையில் அவரின் தாயார் அற்புதம்மாள் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் 2 மாத பரோல் காலம் முடிந்ததால், சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்.

- லோகேஸ்வரன்

12 Jan 2020 11 AM

ஜே.என்.யூ மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி சென்று தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக விடுதியில் மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து ஜே.என்.யூ பல்கலைக்கழக தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

12 Jan 2020 11 AM

இரண்டாவது நாளாகத் தகர்க்கப்பட்ட விதிமீறல் கட்டடங்கள்!

கேரள மாநிலம் கொச்சி மாராடுவில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது. இதன்பேரில் நேற்று இரண்டு கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இந்நிலையில் எஞ்சியிருந்த கெயின்ஸ் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் கட்டங்கள் இன்று தகர்க்கப்பட்டது. சில நொடிகளில் கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

12 Jan 2020 9 AM

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி!

மேற்குவங்க சுற்றுப் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி, ஹவுராவில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையகத்துக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு
பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ள பிரதமர் மோடி, முதல் நாளில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது'' என மோடியிடம் மம்தா தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மோடியின் மேற்குவங்க வருகையை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.