Published:Updated:

இந்தியாவில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; திருவாரூரில் பரிசோதனை மையம்! #Corona #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

13-03-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

13 Mar 2020 9 AM

கொரோனா நெகட்டிவ்!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரம் என்றால் அது சீனாவின் வுஹான் நகரம்தான். அங்கு சிக்கிய இந்தியர்களை இரண்டு கட்டங்களாக இந்திய விமானம் மூலம் அழைத்துவந்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கவைத்தனர். அவர்களின் உடல்நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டுவந்தது. தொடர்ந்து, முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 112 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், முகாமில் இருந்த 112 பேருக்கும் கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதாக இந்தோ திபெத்தியன் பாதுகாப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இன்று அவர்கள் முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 Mar 2020 10 AM

பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் கடும் சரிவுடன் தொடங்கியது. மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 3,177 புள்ளிகள் சரிந்து, 29,600 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 966 புள்ளிகள் சரிந்து, 8,624 புள்ளிகளில் வர்த்தகமானது. வரலாறு காணாத வீழ்ச்சி காரணமாக, பங்குச் சந்தை வர்த்தகம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை வர்த்தகம் கடைசியாக 2008 -ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையைக் கூட்டி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

13 Mar 2020 11 AM

10 ஆண்டுகள் சிறை!

உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது!

13 Mar 2020 12 PM

டெல்லியில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை!

இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தொற்று பரவலாம் என்பதால் ஐ.பி.எல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளுட்டும் டெல்லியில் தடை விதிக்கப்படுவதாக டெல்லியின் துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார்.

13 Mar 2020 1 PM

ஃபருக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து!

காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் உள்ள சில அரசியல் தலைவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் ஃபரூக் அப்துல்லாவும் ஒருவராக சிறைவைக்கப்பட்டார். அவர் சிறைவைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது ஃபரூக் அப்துல்லாவில் தடுப்பு காவல் நீக்கப்பட்டுள்ளது.

ஃபருக் அப்துல்லா
ஃபருக் அப்துல்லா
13 Mar 2020 2 PM

`ஒத்திவைக்கப்பட்டது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்!' - ஐ.சி.சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐ.பி.எல் தொடர் தொடங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. மார்ச் 29 -ம் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15 -ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது!

13 Mar 2020 8 PM

தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு விடுமுறை!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

13 Mar 2020 10 PM

இந்தியாவில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா
கொரோனா

கொரோனா பாதிப்பால் டெல்லி ஜானக்புரி பகுதியைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கெனவே கர்நாடக முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்திருக்கிறது.

இந்தநிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கெனவே, சென்னை கிண்டி, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மூன்றாவதாக திருவாரூரில் பரிசோதனை மையம் அமைகிறது. அந்த பரிசோதனை மையம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு