Published:Updated:

இன்று 509 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 9 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு #NowAtVikatan

கொரோனா
கொரோனா ( AP )

13-05-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

13 May 2020 7 PM

9 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 -ஆக உயர்ந்துள்ளது. நேற்றைவிட பாதிப்பு இன்று குறைவு என்றாலும் 500-ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 380 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது.

13 May 2020 6 PM

கோயம்பேடு விவகாரம் குறித்து முதல்வர்!

``கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே வியாபாரிகளை எச்சரித்தோம். கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இடமாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள் மறுத்துவிட்டனர். கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களால் தான் வெளிமாவட்டங்களில் தொற்று ஏற்பட்டது. நஷ்டத்தை காரணம் காட்டி கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயம்பேடு விவகாரத்தில் அரசு சிறப்பாக செயல்படவில்லை என தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

13 May 2020 11 AM

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார வளர்ச்சிக்குச் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்திருந்தார். மேலும், ``இந்தப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கிடைக்கும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதமாகும்’’ என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

இந்தநிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சிறப்புத் திட்டங்கள் தொடர்பாக அவர் விளக்குவார் என்று தெரிகிறது.

முறுக்கிய முதல்வர்கள்... முடங்கிய நிதித்துறை - 20 லட்சம் கோடி மோடி மேஜிக் பலிக்குமா?
13 May 2020 10 AM

இந்தியாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,525 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 122 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இந்தியாவிலும்

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,425- ஆகவும் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 24,385 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர். 47,480 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

13 May 2020 8 AM

கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த 4 பேருக்குக் கொரோனா!

கோலாலம்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 4 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ச்சியாக ஆறாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக இருக்கிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 8718 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 510 பேருக்குப் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4882 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள 3 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள்.

கொரோனா
கொரோனா

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும் என 8 பேர் கடந்த 2 நாள்களில் உயிரிழந்துள்ளனர்.

`எஸ்.ஐ உட்பட 14 காவலர்களுக்குக் கொரோனா' - இழுத்து மூடப்பட்ட கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி
அடுத்த கட்டுரைக்கு